Actor Vadivelu talks about his memories with Kalaignar Karunanidhi | Karunanidhi: “எம்ஜிஆருக்கு உதவ முடியல.. ஆனால் உனக்கு முடியும்“


திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள் என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். 
முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு தொண்டன் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகிருக்காரு. கலைஞர் அய்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கல்யாணமாகி 10 நாட்களில் மகனை ஸ்கூலுக்கு அனுப்புற மாதிரி ஜெயிலுக்கு அனுப்பிருக்காரு. ஸ்டாலின் என பெயர் வைத்ததால் பள்ளியில் சேர்க்க மாட்டேன் என கூறி வேறு பெயரை வைக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் பள்ளியை மாற்றுவேனே தவிர பெயரை மாற்ற மாட்டேன் என கலைஞர் சொல்லிவிட்டார். அதுதான் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த விஷயங்களை படமாகவே இயக்கலாம். 
நான் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் கலைஞர் நினைவிடம் சென்று வந்தேன். திராவிடம் என்றால் என்னவென்று கேட்பவர்கள் ஒரே ஒருமுறை கலைஞர் நினைவிடம் சென்று பாருங்கள். உள்ளே போனால் அங்கிருக்கும் காட்சிகளை கண்டால் எனக்கு மூச்சு நிற்கும் அளவுக்கு கருணாநிதியின் வரலாறை முதலமைச்சர் மிகச்சிறந்த அளவில் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் இப்படி ஒரு மணிமண்டபத்தை கட்ட யாராலும் முடியாது. யாருக்கும் கிடையாது. 
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன்..கருணாநிதியின் தீவிர பக்தன்
நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் என்ற போதிலும் கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தன், தீவிர விசுவாசி. எம்ஜிஆரை நான் வெளியே இருந்துதான் பார்த்திருக்கிறேன். எம்ஜிஆர்- கருணாநிதி இரண்டு பேரும் நண்பர்கள் தான். ஆனால் கலைஞரின் கதை, வசனத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் அமர்ந்து பேசியிருக்கிறேன். பழகியிருக்கேன். நிறைய விஷயங்களில் கலைஞர் எனக்கு தைரியம் சொல்லுவார். திரை உலகத்தை அவர் எந்தளவுக்கு நேசித்தார் என்பது எல்லா மக்களுக்கும் தெரியும். 
23 ஆம் புலிகேசி படத்தை என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு போன் பண்ணி அய்யாவிடம் பேச வேண்டும் என சொன்னேன். உடனே என்னவென்று பேசினார். நான் உங்களை பார்க்க வேண்டுமென சொன்னேன். என்னடா வடிவேலு எதுவும் பிரச்சினையா? என கருணாநிதி கேட்டார். நான் புலிகேசி படத்தை  ரிலீஸ் பண்ண விட மாட்டேன்னு சொல்றாங்க, ராஜா குதிரையில போக விடமாட்டேன்னு சொல்றாங்க, ஏதோ ப்ளூ கிராஸ் அமைப்பில் பஞ்சாயத்து ஆகி விட்டது  என நான் விஷயத்தை சொன்னேன். அதற்கு கலைஞர் கருணாநிதி என்னிடம், “ராஜா குதிரையில போகாம குவாலிஸ்லயா போவாரு? ” என பதிலடியாக பேசினார்.  
தலைவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை என நான் திரும்ப கூற, எல்லாம் தெரியும் நீ வா என அழைத்தார். உடனே 23ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் விஷயத்தை சொல்ல நான் நேரில் சென்றேன். கிட்டதட்ட 22 நிமிடம் இதற்காக பேசினார். பின்னர் உதவியாளர் சண்முகநாதனை கூப்பிட்டு ஆ.ராசாவுக்கு போன் செய்ய சொன்னார். அவரிடம், “ராஜா குதிரை போகக்கூடாதுன்னு சொல்றாங்களாம். உடனே நீ போற மாதிரி ஏற்பாடு பண்ணிரு..நீயும் ராஜா தானே” என கலாய்த்து பேசிவிட்டு போனை வைத்து விட்டார். 
அதன்பின்னர் என்னைப் பார்த்து, ‘இப்படித்தான் உன் எம்ஜிஆர்’ என பேச ஆரம்பித்ததும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படித்தான் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன் படம் பண்ணும்போது அதுல புலிகேசி மன்னனாக எம்ஜிஆர் வருவார். அப்போதும் இதே மாதிரி பிரச்சினை வந்தது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காட்சியை தூக்கி விட்டோம். அதன்பிறகு இப்போது இந்த பட  பிரச்சினை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த படம் வெளியாகும் என தைரியம் கொடுத்தார். ஒருவாரத்தில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை ரிலீஸ் பண்ண வைத்தவர் கலைஞர் கருணாநிதி தான். கலைஞர் சேனல் ஆரம்பிக்கும்போது அப்படம் தான் முதலில் வாங்கி ஒளிபரப்பு செய்தார்” என நடிகர் வடிவேலு பேசினார். 

மேலும் காண

Source link