BJP Alliance: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று, இந்த முறையும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடக்க உள்ள தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பரபரப்பாகும் தேர்தல் களம்:
தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் சுழன்று, சுழன்று வேலை செய்து வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், கூட்டணியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கர்நாடகாவில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், உத்தர பிரதேசத்தில் ஜெயந்த் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளது பாஜக.
அந்த வரிசையில், ஒடிசாவில் கூட்டணியை பலப்படுத்த பாஜக திட்டமிட்டு வந்தது. அதற்காக நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்கவிருப்பதால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
நவீன் பட்நாயக் எடுத்த அதிரடி முடிவு:
கடந்த 17 நாள்களாக இரு கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லி, புபனேஸ்வர் நகரங்களில் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. பாஜகவும் பிஜு ஜனதா தளமும் தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஒடிசா மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல், “ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளிலும் 147 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தனித்த போட்டியிட உள்ளோம். மாநில மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரவில்லை” என்றார்.
மாநிலத்தில் நான்கில் மூன்று பங்கு தொகுதிகளை கைப்பற்றுவோம் என பிஜு ஜனதா தளம் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஒடிசாவையும் மாநில மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முடிவுகளை எடுக்கும் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பிரணவ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன?
பிஜு ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக அதன் தலைவராக வி.கே. பாண்டியன் வருவார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், சமீபத்தில் அரசுப் பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார்.
தமிழ்நாட்டை சேர்ந்த இவர், ஒடிசாவில் அரசு அதிகாரியாக பணியாற்றியபோது, மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து நலத்திட்டங்கள் வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். ஒரு கட்டத்தில், நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய ஆளாக மாறினார். இவரின் அனுமதி இன்றி, அவரை பார்க்க முடியாத அளவுக்கு வி.கே. பாண்டியனின் இமேஜ் உயர்ந்தது.
கூட்டணி பேச்சுவார்த்தையின்போது, நவீன் பட்நாயக்கிற்கு அடுத்து, பிஜு ஜனதா தளத்தின் தலைவராக வி.கே. பாண்டியன் வருவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான், கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும் காண