“தமிழகத்தில் கோவை முக்கியமான தொகுதியாக இருந்தாலும், கரூரை மறக்க முடியாது. ஏனென்றால், திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வரும் அண்ணாமலையின் சொந்த தொகுதி இது” என கரூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் பேசினார்.
கரூர் அடுத்த புலியூரில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் பரப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”உச்சி வெயிலில் சிரமம் பார்க்காமல் இவ்வளவு நேரம் காத்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் நமது வேட்பாளரின் வெற்றி உறுதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உங்கள் வாக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும். பிரதமர் மகளிர் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். 100 நாள் வேலை ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி உள்ளார்.
தமிழகத்திலேயே பிரபலமான தொகுதியாக கோவை உள்ளது. ஆனால், கரூர் தொகுதியை மறந்து விட முடியாது. ஏனென்றால், திமுகவின் ஊழலை வெளிக்கொண்டுவரும், அண்ணாமலையின் சொந்த தொகுதியாகும். கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லி, சென்னை என்றும், கட்சி வேலைகளுக்காக வேறு மாநிலங்களிலேயே இருக்கிறார். அவர் கரூரில் இருப்பது மிக மிக குறைவு. கரூர் தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளது. எதற்கும் தீர்வு இல்லை. மக்கள் பிரதிநிதிகள் மக்கள் வரிப்பணத்தை சுரண்டுவதிலேயே குறிக்கோளாக இருக்கின்றனர்.
கரூரில் உள்ள கோயம்பள்ளி மேம்பாலம் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி வழியாக பழனி செல்லும் ரயில்வே பாதை அமைக்க வேண்டும். இந்த வேலைகளை எல்லாம் செய்யாமல் நாடாளுமன்ற உறுப்பினர் தூங்கிக் கொண்டிருக்கிறார். மேலும், கரூர் மாநகரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. கட்டணத்தை உயர்த்திய பிறகாவது திமுக மின்சாரத்தை முறையாக கொடுக்கலாம். அதையும் கொடுக்காத அரசு திமுக அரசு. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள அமைச்சர்களை சந்தித்து, பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை” என்றார்.
மேலும் காண