மக்களவை தேர்தலில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

இந்திய நாட்டில் மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், யாரும் எதிர்பாராத வகையில் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம் தொகுதி பிரபலமான தொகுதியாக மாறியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியின் தற்போதைய கள நிலவரம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.

கள நிலவரம்:

ராமநாதபுரம் தொகுதியை எடுத்து கொண்டால் மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில், இந்திய முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிடுகிறார். அஇஅதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இம்மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இருப்பினும் தற்போது இருக்கக்கூடிய கள நிலவரங்களை பார்க்கும்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. முக்குலத்தோர் சமூகம் அதிகமாக உள்ள வாக்குகள் அஇஅதிமுக-வுக்கு அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா மறைவு மற்றும் அஇஅதிமுக பிளவுக்கு பின்பு ஓபிஎஸ்-தினகரன் ஆகியோருக்கு ஆதரவாகவும் இபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ் தோற்கடிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் வேலை பார்க்கப்படுவதாகவும், அதன் வெளிப்பாடே ஓபிஎஸ் என்கிற பெயரில் 5 பேரை மனுதாக்கல் செய்ய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். – காரணம் என்ன?

ராமநாதபுரம் தேர்வு:

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து இருப்பதால் முக்குலத்தோரின் வாக்குகள் ஓபிஎஸ் பக்கம்தான் என கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே, அதிமுக வேட்பாளரையும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான ஜெயகோபாலை நிறுத்தி, வாக்குகளை பிரித்து ஓபிஎஸ்-ஐ தோற்கடிக்க இபிஎஸ் திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இபிஎஸ்-ஐ மனதில் வைத்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பில்லை எனவும் தகவல் வெளியாகிறது.

மேலும், ராமநாதபுரத்தில் பாஜகவுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. இதுவும் ஓபிஎஸ்-க்கு மேலும் வலு சேர்க்கும். இதன் காரணமாக ராமநாதபுரத்தை ஓபிஎஸ் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும், திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரும், தற்போதைய எம்.பி-யுமான நவாஸ்கனிக்கு பெரிதாக எதிர்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தோர் சிலருக்கு பாஜக மீது எதிர்ப்பு உள்ளதாகவும், அது நவாஸ் கனிக்குதான் வாக்குகளாக மாறும் எனவும் கூறப்படுகிறது. அதனால் ஓபிஎஸ் மற்றும் நவாஸ் கனியிடையே கடுமையான போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ் வெற்றி:

கடந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில், 38 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. ஒரு இடங்களில் அதிமுக வென்றது, அது தேனி தொகுதிதான். அங்கு வெற்றி வேட்பாளராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். ஆகையால், ஓபிஎஸ் அரசியல் அனுபவத்தை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. அதுவும், இந்த முறை வாழ்வா, சாவா என்பது போன்ற சூழ்நிலையில் ஓபிஎஸ் வெற்றி பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.

ராமநாதபுரம் கள நிலவரமானது மாறி கொண்டே இருக்கிறது. சில தருணங்களில் நவாஸ் கனிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சில தருணங்களில் ஓபிஎஸ்-க்கு வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஓபிஎஸ்-க்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை பாஜக எதிர்ப்பு ஓபிஎஸ் பக்கம் திரும்பினால் நவாஸ் கனிக்கு சாதகம்தான் என்பதால் தேர்தல் முடிவின்போதே உண்மை நிலவரம் தெரிய வரும்.

Also Read: Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு – ஜெயலலிதாவின் அரசியல் களம்

இந்த செய்தியை விரிவாகவும் வீடியோவாகவும் பார்க்க விரும்பினால், இந்த யூடியூப் பக்கத்தை கிளிக் செய்யவும்;