விழுப்புரம்: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பம்மாத்து வேலை:

அப்போது அவர் பேசுகையில், "நடைபெற உள்ள தேர்தல் என்பது சிறு அணிகளுக்கிடையான தேர்தல் அல்ல. ஜனநாயகமா, சர்வாதிகாரமா?. மதச்சார்பின்மையா? மதவெறியா? கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? சர்வாதிகாரமா? என்பதுதான் இத்தேர்தலில் நாம் காணக்கூடிய விடை. எடப்பாடி பழனிச்சாமியை கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன், ஜனநாயகமா, சர்வாதிகாரமா. மதச்சார்பின்மையா, மதவெறியா. கூட்டாட்சியா, ஒற்றை கட்சி ஆகியவற்றில் உங்களின் நிலைப்பாடு என்ன என கூற வேண்டும்.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக பா.ஜ.க.வின் அடிமையிலும் அடிமையாக செயல்பட்டுவிட்டு, இப்போது பா.ஜ.க.வை எதிர்ப்பதாக சொல்கிறார். உங்களின் பம்மாத்து வேலையை தமிழாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது மாநிலங்களவையல் அதிமுகவும், பாமகவும் ஆதரித்து அரசியல் பாவத்தை செய்துள்ளனர்.

மக்கள் ஏற்பார்களா?

விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்தவர்கள் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். கூட்டணி தர்மத்திற்காக எல்லாவற்றையும் ஆதரித்ததாக எடப்பாடி.பழனிச்சாமி கூறுகிறார். கூட்டணி தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் அதிமுகவோடு பேசுகிறார். அன்புமணி ராமதாஸ் பாஜகோடு பேசுகிறார். காலையில் ஒரு கட்சி, மாலையில் ஒரு கட்சியோடு கூட்டணி பேசுகிறார்கள் இதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா. மீண்டும் பாஜக வெற்றி பெற்ற ஆட்சிக்கு வந்தால் இதுதான் கடைசித் தேர்தல்.

தென் சென்னை வேட்பாளர் தமிழிசை தேர்தல் பத்திரம் ஊழலே இல்லை என கூறுகிறார், உலகத்திலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி பாஜக என மோடி கூறுவார் ஆனால் உலகத்திலேயே உலக மகா ஊழல் செய்த கட்சி பாஜக. நமக்கு பத்திரம் என்றால் நில பத்திரம் தான் தெரியும். ஆனால் தேர்தல் பத்திரம் எனக் கொண்டு வந்து ஐந்து சட்டங்களை திருத்தினார்கள்.

மூன்று அடியாட்கள்:

16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெரு நிறுவனங்கள் நிதி கொடுத்துள்ளது. இவற்றில் பாதிக்குமேல் பாஜக பெற்றுள்ளது. இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திரம் என்பது இது சட்டப்படியான ஊழல் என கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தேர்தல் பத்திர ஊழலை மறைக்க அரவிந்த் கெஜிரிவாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். தேர்தல் பத்திரங்களின் மூலம் பணத்தை வசூல் செய்ய சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என்ற மூன்று அடியாட்களை வைத்துள்ளார்கள். உலக மகா ஊழல் செய்த பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என நிர்மலா சீதாராமன் கணவரே கூறியுள்ளார் என்று கூறினார்.