KKR Vs SRH IPL 2024 Innings Highlights Kolkata knight riders Gives 209 Runs Target to sunrisers hyderabad | KKR Vs SRH Innings Highlights: ஐதராபாத்திற்கு எதிராக ரஸல் ருத்ரதாண்டவம்


KKR Vs SRH Innings Highlights: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா வீரர் ரஸல் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.
கொல்கத்தா – ஐதராபாத் மோதல்:
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. கொல்கத்தா இடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஒற்றை இலக்கங்களில் சரிந்த விக்கெட்டுகள்:
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், சுனில் நரைன் மற்றும் அவரை தொடர்ந்து வந்த வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கேப்டன்  ஸ்ரேயாஸ் ஐயர் டக்-அவுட் ஆனார். இதனால், 51 ரன்களை சேர்ப்பதற்குள் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. 
பில் சால்ட் அபாரம்:
ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான, பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம், 40 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் விளாசி, 54 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக சிறிதுநேரம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய, ரமன்தீப் சிங் 4 சிக்சர்கள் உட்பட 35 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ஐதராபாத் அணிக்கான இலக்கு:
இறுதியில் 7வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரஸல் மற்றும் ரின்கு சிங், ஐதராபாத் பந்துவீச்ச நாலாபுறமும் சிதறடித்தனர். குறிப்பாக ரஸல் அட்டகாசமாக விளையாடி வெறும் 20 பந்துகளில் அரைசதம் விளாசினர். நடப்பு தொடரில் அதிவேகமான அரைசதமாக பதிவாகியுள்ளது. 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 64 ரன்களை விளாசினார். இதனிடயே, ரிங்கு சிங் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை சேர்த்தது.
ஐதராபாத் சார்பில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளையும், மயங்க் மார்கண்டே 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி நிர்ணயித்த 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை, ஐதராபாத் அணி அடிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அந்த அணியில் திரிபாதி, மார்க்ரம், கிளாசென், அபிஷேக் சர்மா மற்றும் பாட் கம்மின்ஸ் என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண

Source link