Karur Abaya Pradhan Renkanathaswamy Thirukalyana Vaibogam program | சித்திரை திருவிழா! கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்


கரூர் அபய பிரதான ரெங்கநாதசுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவில் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருக்கல்யாண வைபோகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 

சித்திரை திருவிழா:
கரூர் மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திரு வீதி உலா காட்சி தருகிறார். இந்நிகழ்ச்சியில் சித்திரை மாத முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிகளுக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பால் தயிர் திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அதை தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி அபய பிரதான ரங்கநாதர் சுவாமியை ஊஞ்சலில் கொழுவிருக்க செய்தனர். 
 

திருக்கல்யாணம்:
தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் ஆலய மண்டபத்தில் பிரத்யேக யாக குண்டங்கள் அமைத்து திருக்கல்யாணயாக நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும், பால்பழம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் சீர் கொண்டு வந்த பிறகு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
 

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாமிக்கு மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
 
 
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
 
 

மேலும் காண

Source link