நடப்பு ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

207 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பம் முதலே சென்னை அணியின் பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக ராகுல் சஹாரின் வேகத்தில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் சாஹா ஆகியோர் தங்களது விக்கெட்டினை 8 ரன்கள் மற்றும் 21 ரன்கள் எடுத்த நிலையில் இழந்து வெளியேறினர். பவர்ப்ளேவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்ததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது.

அதன் பின்னர் கைகோர்த்த தமிழ்நாடு வீரர்களான விஜய் சங்கர் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர் சாய் சுதர்சன் இருவரும் இணைந்தனர். இருவரும் நிலைமையை ஓரளவுக்கு சமாளித்து குஜராத் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சென்னை அணியின் பகுதி நேர பந்து வீச்சாளர் டேரில் மிட்ஷெல் வீசிய 8வது ஓவரில் விஜய் சங்கர் தனது விக்கெட்டினை 12 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 42 வயது நிரம்பிய தோனி விஜய் சங்கர் கொடுத்த கேட்சினை பறந்து பிடித்தார்.

முதல் 10 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அடுத்த 10 ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் சாய் சுதர்சனும் டேவிட் மில்லரும் நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

சென்னை அணியின் தேஷ் பாண்டே வீசிய 12வது ஓவரில் டேவிட் மில்லர் தனது விக்கெட்டினை 21 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த குஜராத் அணி வீரர்கள் அணியின் தேவையை உணர்ந்து விளையாடததால் மிடில் ஓவரில் குஜராத் அணிக்கு ரன்கள் போதுமானதாக வரவில்லை.

இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மடுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியின் சார்பில் தேஷ்பாண்டே, தீபக் சஹார், முஸ்தஃபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.