How many will be jailed before polls? Supreme Court relief to YouTuber Saattai Duraimurugan | Saattai Duraimurugan : தேர்தலுக்கு முன் எத்தனை பேரை சிறைப்படுத்துவது?


தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாட்டை துரைமுருகன், கலந்துகொண்டு பேசினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாகத் தகவல் வெளியானது. 
உயர் நீதிமன்றத்தை நாடிய சாட்டை துரைமுருகன் 
இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அவதூறாகப் பேசியதாக, கைது செய்யப்பட்டார், இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்றத்தை நாடினார்.
ஜாமீன் ரத்து
ஏற்கனவே  தஞ்சை சம்பவத்தில் மீண்டும் இப்படிப் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்த நிலையில், மீண்டும் துரைமுருகன் இவ்வாறு அவதூறு பேசியதாக காவல்துறை வாதிட்டது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஏப்.8) நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தலுக்கு முன்பாக எத்தனை பேரைத்தான் சிறையில் அடைப்பது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், யூடியூபரும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
பார்வையை வெளிப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவது தவறில்லை
இதுகுறித்து மேலும் பேசிய அமர்வு, ’’தேர்தலுக்கு முன்பு யூடியூபில் அவதூறு பரப்பியதாக ஒவ்வொருவரையும் நாம் சிறையில் அடைக்க ஆரம்பித்தால், எத்தனை பேர் சிறையில் இருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.ஒருவரின் பார்வையை வெளிப்படுத்தி, போராட்டத்தில் ஈடுபடுவது என்பது அவரின் சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகாது ’’என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கடும் விமர்சனம்
சாட்டை துரைமுருகன்  யூடியூபில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தும் அவதூறான கருத்துக்களை பேசியும் வீடியோ வெளியிட்டார். இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

மேலும் காண

Source link