திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் கடந்த சில மாதங்களாக பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் அன்று, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒரு தரப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி தரவில்லை.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், மனுதாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று அனுமதி வழங்கினார்.
ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதாகலும், அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்த மாவட்ட காவல்துறை, 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. இதைக் கண்டித்து, தீபம் ஏற்ற முயன்றவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் படை வீரர்களை பாதுதாகாப்புக்கு அனுப்பி, அவர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். ஆனால், 144 தடை காரணமாக காவல்துறை அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம், நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதிநீக்கம் செய்வதற்கான இம்பீஸ்மெண்ட் நோட்டீஸை எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வழங்கினர். மேலும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரு மலையில் தீபம் ஏற்றவே போராட வேண்டி இருப்பதாகவும், உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், மாநில அரசு அனுமதி மறுப்பதாகவும், தங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்துவிட்டார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கேட்பதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கிடையே, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை முடிந்து, கடந்த 18ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றனர். தீபத்தூண் இருப்பது கோயில் நிலத்தில்தான் என்றும், தர்க்காவின் நிலத்தில் இல்லை என்றும் திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறுவது, நகைப்புக்குறியது என்று விமர்சனம் செய்த நீதிபதிகள், தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அப்போது, பொதுமக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கினர்.
திருப்பரங்குன்றம், மதுரை, தீபத்தூண், கார்த்திகை தீபம், tiruparankunram, deepam, thiruparankunram, madurai, karthikai deepam, high court,

