Voter Turnout: ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவில் முன்னிலை வகித்த திரிபுரா:

காலை 7 மணியில் இருந்து விறுவிறுப்பாக நடந்த வந்த வாக்குப்பதிவு மதியம் மந்தமானது. வெயில் தாழ்ந்த பிறகு, வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டியபோதிலும், எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 78.53 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக, உத்தரப் பிரதேசத்தில் 53.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

திரிபுராவுக்கு அடுத்தபடியாக மணிப்பூரில் 77.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தில் 70.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தில் 54.50 சதவிகித வாக்குகளும் சத்தீஸ்கரில் 72.61 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தொடர்ந்து குறையும் வாக்கு சதவிகிதம்:

ஜம்மு காஷ்மீரில் 69.86 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் 64.67 சதவிகித வாக்குகளும் கேரளாவில் 65.23 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் 55.60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் 61.96 சதவிகித வாக்குகளும் மேற்குவங்கத்தில் 71.84 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அஸ்ஸாம், பீகாரில் தலா 5 தொகுதிகளுக்கும் மேற்குவங்கம், சத்தீஸ்கருக்கு தலா 3 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடந்தது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கேரளாவை பொறுத்தவரையில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் சசி தரூர், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் ஆகியோர் களம் கண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஷைலஜா, தாமஸ் ஐசக், பி ரவீந்திரநாத் ஆகியோர் களம் கண்டனர்.

பாஜக சார்பில் நடிகர் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிட்டனர். கேரளாவை போன்றே, கர்நாடகாவிலும் பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக சார்பில் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் ஊரக பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டார். 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், பல்வேறு மாநிலங்களில் வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த தேர்தலை காட்டிலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த முறை 6.7 சதவிகித வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: அகிலேஷ் யாதவ் மனைவிக்கு இந்த நிலைமையா? கணவரிடம் கடன்பட்ட டிம்பிள் யாதவ்.. சொத்து மதிப்பு இவ்வளவா?

Source link