தமிழ்நாட்டில் எப்போதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோடை காலத்தில் விடுமுறை விடப்படுவது வழக்கம். பள்ளிகளை பொறுத்தவரையில் 12,11 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு இறுதியாண்டு தேர்வுகள் நிறைவு பெற்றுவிட்டது. அதேபோல, 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கும் இன்னும் சில தினங்களில் தேர்வுகள் நிறைவு பெற்று, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கல்லூரிகளிலும் சில துறைகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நிறைவு பெற்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதம் வெயில் மற்ற மாதங்களை காட்டிலும் மிக அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவே, தமி்ழ்நாட்டில் பள்ளிகளுக்கு மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலம் தொடங்கி விட்டதால் பல குடும்பங்களும் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல தொடங்கி வருகின்றனர்.
தயார் நிலையில் சுற்றுலா தளங்கள்:
குறிப்பாக, தொடர் விடுமுறை வந்துவிட்டாலே குளிர் பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்லத் தொடங்கி விடுவார்கள். குழந்தைகளுக்கு விடுமுறை தொடங்கி விட்டதால் பலரும் கோடைவாச ஸ்தலங்களுக்கு செல்லத் தொடங்கி வருகின்றனர். அதற்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவும், பேருந்து பயணச்சீட்டு முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வியாபாரிகள் உற்சாகம்:
இனி வரும் ஒரு மாத காலம் முழுவதும் கோடை விடுமுறை காலம் என்பதால், அந்த பகுதியில் வசிக்கும் வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் குஷியடைந்துள்ளனர். இதனால், அவர்களது வியாபாரம் வெகு சிறப்பாக நடைபெறும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். அதேசமயம், அடுத்த ஒரு மாதத்திற்கு சுற்றுலா பயணிகள் சுற்றுலா ஸ்தலங்களில் குவிவார்கள் என்பதால் காவல்துறையினர் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காததை உறுதிப்படுத்த பாதுகாப்பு ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாததையும் உறுதி செய்யவும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பத்தை தணிக்கும் குளிர் பிரதேசங்கள் மட்டுமின்றி கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கும் மக்கள் படையெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவியும் பகுதிகளில் சுகாதார பிரச்சினை ஏற்படாதவாறும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுநர்களும் தங்களது வருவாய் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மேலும், இன்னும் சிலர் தங்களது குடும்பங்களுடன் ஆன்மீக சுற்றுலாவிற்கு திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்தந்த கோயில் நிர்வாகங்களும் அதற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜில்லுன்னு ஒரு டம்ளர் மண்பானை தண்ணீர் குடிக்க பைப் வைத்த பானையை வாங்குவோமா!!!
மேலும் படிக்க: 30 ஆண்டுகளாக மக்களின் தாகம் தீர்க்கும் மனிதர்; தஞ்சை ஒப்பந்தக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்
மேலும் காண