Iran – Pakistan: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானில், அந்நாட்டு பிரதமரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பாகிஸ்தான் சென்ற ஈரான் அதிபர்:
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்செய்யும் நோக்கில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தீவிரவாதிகளின் புகலிடமாக இருப்பதாக, இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், ஈரான் அதிபர் மற்றும் பாகிஸ்தான் அதிபர் இடையேயான சந்திப்பு, ஆசிய பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: Reliance Profit: 3 மாதங்களில் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.18 ஆயிரத்து 951 கோடி – ஆனாலும் நஷ்டமாம்..!
காஷ்மீர் பிரச்னையை பேசிய பாகிஸ்தான்:
இருநாட்டு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். ஆனால் அது பற்றி பேசும் முயற்சியை ஈரானிய அதிபர் தவிர்த்துள்ளார். அதற்கு பதிலாக இப்ராஹிம் ரைசி, பாலஸ்தீன பிரச்சினை குறித்து பேசியுள்ளர். மேலும், அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களுக்கு ஈரான் எவ்வாறு தொடர்ந்து ஆதரவளிக்கிறது என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
விவாதிக்கப்படும் விவகாரங்கள் என்ன?
விரிசல் ஏற்பட்டுள்ள இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை சீர்செய்யும் முயற்சியில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மதம், கலாச்சாரம், ராஜதந்திரம், முதலீடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொடர்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தையும் இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு:
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் தொடர்பாக பேசிய இப்ராஹிம் ரைசி, “ இருநாடுகளுக்கு இடையே உயர்ந்த மட்டங்களில் உறவுகளை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக அளவு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவை 10 பில்லியன் டாலராக அதிகரிக்க முதல் கட்டமாக முடிவு செய்துள்ளோம்” என கூறினார். தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் பேசுகையில், “நாங்கள் இருவரும் எதிர்கொள்ளும் சவால்களை மீறி இந்த உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். அதனால் பாகிஸ்தானும் ஈரானும் செழிக்கும். நமது எல்லைகள் முன்னேற்றத்தைக் காண முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கு தற்போது சற்று தணிந்துள்ளது.
மேலும் காண