17வது ஐபிஎல் லீக் தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் லீக் கிரிக்கெட்டில் இன்று முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ரஸல் 64 ரன்களும், பிலிப் சால்ட் 54 ரன்களும் சேர்த்திருந்தனர். ஹைதராபாத் அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளும், மார்கண்டே இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 209 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை இந்திய வீரர்களான மயாங்க் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடங்கினர். இருவரும் பவர்ப்ளேவை சரியாக பயன்படுத்தி ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் சிறப்பாக விளையாடினர். பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் மயாங்க் தனது விக்கெட்டினை 21 பந்தில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இவரது விக்கெட்டினை கொல்கத்தா அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா கைப்பற்றினார்.

போட்டியின் 8வது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 19 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ரஸல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் அணியின் ஸ்கோர் ஓவருக்கு 10 ரன்கள் என்ற கணக்கில் இருக்கும்படியாக ஹைதராபாத் அணி விளையாடியது. 10 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டினை இழந்து 99 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 110 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்ததால், இரு அணி வீரர்களும் கிட்டத்தட்ட உயிரைக் கொடுத்து விளையாடினர்.

போட்டியின் 12வது மற்றும் 13வது ஓவரில் மார்க்ரம் மற்றும் ராகுல் த்ரிப்பாதி தங்களது விக்கெட்டினை இழக்க, போட்டி கொல்கத்தா பக்கம் மெல்ல மெல்ல சாயத் தொடங்கியது. கடைசி 7 ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 98 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால் களத்தில் இருந்த யான்சன் மற்றும் சமத் கூட்டணிக்கு கொல்கத்தா தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது.

கடைசியில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 60 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரை வருண் சக்ரவர்த்தி வீசினார். அந்த ஓவரில் ஹைதராபாத் அணி 21 ரன்கள் சேர்த்தது. 19வது ஓவரில் 26 ரன்கள் சேர்த்தது, இந்த ஓவரை மிட்ஷெல் ஸ்டார்க் வீசினார். 20வது ஓவரை ஹர்சித் ராணா வீசினார். கடைசி ஓவரில் ஹைதாராபாத் அணி 2 விக்கெட்டினை இழந்து 8 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் கொல்கத்தா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.