கரூரில் நீதிமன்ற ஊழியர் நீதிபதி முன்னிலையில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டெபுடி நாசர் நிலையில் பணியாற்றி வருபவர் நடராஜன். இந்த நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார். இவருக்கு உடல் நலம் குன்றியதால் தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு உரிய விடுப்பு மேற்படி அரவக்குறிச்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு மருத்துவக்குழு அளித்த சான்றின் அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அவருக்கு உரிய விடுப்பு அனுமதித்து கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கான ஊதியத்தினை பெற்றுத் தராமல் நீதிபதி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அலுவலகம் வந்து போவதற்கு பேருந்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்ததால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு நீதிபதிக்கு முன்பாகவே பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் செயலாளர் பொன்.ஜெயராம், ”மன உளைச்சலுக்கு ஆளாக்கி நடராஜன் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அரவக்குறிச்சி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட பணியாளருக்கு நியாயம் வழங்கி உதவிட வேண்டும். அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சந்தித்து முறையீட்டு மனு வழங்கியுள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடிவடிக்கை குறித்து நிர்வாகிகள் கூடி முடிவு செய்து போராட்ட இயக்கங்களை திட்டமிடுவோம்” என்றார்.
மேலும் காண