ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், கொல்கத்தா – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இது உள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.

சரிந்த டெல்லி:

தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா – ஜேக் ப்ரெசர் மெக்கர்க் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். பவுண்டரிகளாக விளாசிய பிரித்வி ஷா 13 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கடந்த போட்டியில் விளாசிய ஜேக் ப்ரெசர் 12 ரன்களில் அவுட்டானார்.

அடுத்த சில நிமிடங்களில் ஷாய் ஹோப் 6 ரன்னில் அவுட்டாக, அபிஷேக் போரல் – ரிஷப் பண்ட் சிறிது நேரம் நின்று ஆடினர். நிதானமாக ஆடிய அபிஷேக் போரல் 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு அவுட்டாக, மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆட முயற்சித்தார். ஆனால், அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை.

154 ரன்கள் இலக்கு:

அதேசமயம் அவர் அளித்த எளிய கேட்ச் வாய்ப்பை கொல்கத்தா வீரர்கள் வீணடித்தனர். ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிய ரிஷப் பண்ட் சக்கரவர்த்தி சுழலில் வீழ்ந்தார். அவர் 27 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுனையில் நிதானம் காட்டிய அக்‌ஷர் படேல் 15 ரன்களுக்கு அவுட்டாக, அதிரடி வீரர் ஸ்டப்ஸ் 4 ரன்னில் அவுட்டானார்.

111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த டெல்லி அணிக்கு குல்தீப் யாதவ் கடைசி கட்டத்தில் கைகொடுத்தார். அவரது பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி டெல்லி அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். குல்தீப் கடைசி கட்ட அதிரடியால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர். இதனால், கொல்கத்தாவிற்கு 154 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அசத்திய வருண், காப்பாற்றிய குல்தீப்:

கொல்கத்தா அணிக்காக வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கினார். அவர் 3 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார். வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் டெல்லி 100 ரன்களை கடக்குமா? என்ற சூழலிலே பேட்டிங் செய்து கொண்டிருந்தது. கொல்கத்தா அணி கடைசி 5 ஓவர்களில் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர தவறிவிட்டனர். இதன் காரணமாகவே, கொல்கத்தா அணி 153 ரன்களை அடித்தது.

முன்னணி வீரர்கள் பிரித்விஷா, ஜேக் ப்ரெசர், ரிஷப்பண்ட், ஸ்டப்ஸ் ஆகியோர் சொதப்பிய நிலையில், கடைசி கட்டத்தில் குல்தீப் யாதவ் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 26 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்தார்.