Haryana School Bus Accident: 6 Children Killed, Several Injured, Principal Among 3 Held | Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி


Haryana School Bus Accident: ஹரியானாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்து தொடர்பாக, தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து:
வியாழக்கிழமை காலை ஹரியானாவின் நர்னாலில் ஒரு கிராமம் அருகே பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஜிஎல் பப்ளிக் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து கனினாவின் உன்ஹானி கிராமம் அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்ததாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டாலும், விதிகளை மீறி நேற்று பள்ளி இயங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான சுமார் 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற இந்த பேருந்து, நேற்று காலை 8.30 மணியளவில் விபத்தில் சிக்கியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த  பேருந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப் பைகள், காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் படிப்புப் பொருட்கள் விபத்து நடந்த இடத்தில் சிதறிக்கிடந்த சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

VIDEO | Several children were injured when a school bus carrying them overturned in Haryana’s #Narnaul earlier today. More details are awaited.(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/mkaLfTAgpd
— Press Trust of India (@PTI_News) April 11, 2024

3 பேர் கைது:
விபத்து நடந்த வழியாக சென்ற பொதுமக்கள் தான், காயமடைந்த சுமார் 20 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பேருந்து ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுனர் மதுபோதையில் இருந்தாரா என்ற கோணத்திலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தை அதிவேகமாக செலுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே, விடுமுறை தினத்திலும் பள்ளி ஏன் திறக்கப்பட்டது என்பதை விளக்குமாறு தனியார் பள்ளிக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் சீமா த்ரிகா தெரிவித்துள்ளார். வாகனத்தின் தகுதிச் சான்றிதழ் நீண்ட காலத்திற்கு முன்பே காலாவதியாகிவிட்டதாகவும், அதில் காப்பீடு மற்றும் பிற ஆவணங்கள் இல்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
தலைவர்கள் இரங்கல்:
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “கனினா, மகேந்திரகரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது வருத்தம் அளிக்கிறது. அப்பாவி குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்களுக்கு உதவ உள்ளூர் நிர்வாகம் தயாராக உள்ளது. நான் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். இந்த இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். உள்ளூர் நிர்வாகம் காயமடைந்த குழந்தைகளுக்கு உதவி செய்கிறது. அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
 

மேலும் காண

Source link