director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்


துல்கர் சல்மான் படத்தை இயக்கியவரும், நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி:
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. சென்னை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேசிங்கு பெரியசாமியிடம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவர் இருந்துள்ளார். இவர், தேசிங்கு பெரியசாமியின் அனைத்து விதமான வரவு செலவு மற்றும் பணப் பரிவர்த்தனைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தேசிங்கு பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறியுள்ளார்.
3 லட்சம் கையாடல்:
ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேசிங்கு பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்துள்ளார். இதுபற்றி கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தேசிங்கு பெரியசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த தேசிங்கு பெரியசாமி இந்த விவகாரம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உதவி இயக்குநர் முகமது இக்பாலை தேடி வருகின்றனர்.

மேலும் காண

Source link