Delhi CM Arvind Kejriwal personally argues his case before Delhi Court accuses ED running extortion racket | நீதிமன்றத்தில் மாஸ்! தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்


Kejriwal Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தனது கைதுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார்.
பரபரப்பை ஏற்படுத்தும் கெஜ்ரிவால் வழக்கு:
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து, கெஜ்ரிவாலின் ஆறு நாள் அமலாக்கத்துறை காவல் இன்றோடு முடிவுக்கு வந்த நிலையில், மேலும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய விசாரணையில், அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “விசாரணையின்போது, கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். கோவாவை சேர்ந்த சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து கெஜ்ரிவாலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே, மேலும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. 
முதலமைச்சராக பதவி வகிப்பதாலேயே அவருக்கு விடுதலை கிடைக்காது. முதலமைச்சருக்கு என தனி சட்டங்கள் இல்லை. சாமானியனை கைது செய்வதற்கான அதே உரிமை முதலமைச்சரை கைது செய்வதற்கும் உள்ளது” என்றார்.
தனக்காக தானே வாதிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்:
நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதங்களை முன்வைத்த கெஜ்ரிவால், தன்னை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார். தொடர்ந்து வாதிட்ட அவர், “இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் எப்படியாவது என்னை சிக்க வைப்பதே அமலாக்கத்துறையின் ஒரே நோக்கம்.
இந்த வழக்கே ஒரு அரசியல் சதி. எனக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஆதாரங்களை மட்டும் சேகரித்து வருகிறது. மேலும் ஒப்புதல் அளித்தவர் கூட அவருக்கு எதிராக அறிக்கை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அப்ரூவர் கட்டாயப்படுத்தப்படுகிறார். அமலாக்கத்துறைக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஆம் ஆத்மியை ஒழித்துவிட்டு பணம் வசூலிப்பதற்காக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தி வருகிறது” என்றார்.
தனது மொபைல் போனின் கடவுச்சொல்லை தருவதற்கு கெஜ்ரிவால் மறுப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. ஆனால், மின்னணு சாதனங்களை திறக்க தன்னை கட்டாயப்படுத்த கூடாது என கெஜ்ரிவால் வாதிட்டார்.
இரு தரப்பு வாதத்தை கேட்ட சிபிஐ சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, வரும் 1ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.
ஆம் ஆத்மி கட்சியின் கோவா மாநில தலைவர் அமித் பலேகர் மற்றும் சில கட்சி தலைவர்களை அமலாக்கத்துறை நேற்று விசாரணைக்கு அழைத்தது. அவர்கள் இன்று கோவா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 

மேலும் காண

Source link