CSK vs DC Match Highlights: களத்தில் தோனி.. கைவிட்டுப்போன ஆட்டம்; 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய டெல்லி

17வது ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதியது. இந்த போட்டி மார்ச் மாதம் 31ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் வார்னர் 52 ரன்களும் ரிஷப் பண்ட் 51 ரன்களும் சேர்த்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, போட்டியின் மூன்றாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.

இதனால் சென்னை அணிக்கு பவர்ப்ளேவின் முதல் மூன்று ஓவர்களில் நெருக்கடிக்கு ஆளானது. அதன் பின்னர் கைகோர்த்த ரஹானே மற்றும் டேரில் மிட்ஷெல் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது மட்டும் இல்லாமல் பொறுப்பாகவும் ரன்கள் சேர்த்தனர்.

இந்த கூட்டணி 68 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் 75 ரன்களாக இருந்த நிலையில் 11வது ஓவரில் பிரிந்தது. இதையடுத்து களத்திற்கு இம்பேக்ட் ப்ளேயர் சிவம் துபே, ரஹானேவுடன் இணைந்து விளையாடினார். ரஹானே அதிரடியாக பவுண்டரிகளை பறக்க விட சென்னை அணி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். துபேவும் கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விளாச டெல்லி அணி இந்த கூட்டணியை பிரிக்க தன்னிடம் இருந்த பந்து வீச்சாளார்களைப் பயன்படுத்திப் பார்த்தது. ஆனால் இதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை.

போட்டியின் 13வது ஓவரில் ரஹானே மற்றும் சமீர் ரிஸ்வியை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் வீழ்த்தி, ஆட்டத்தை டெல்லி அணி பக்கம் கொண்டு வந்தார். 15 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் சென்னை அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 79 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் சிவம் துபே தனது விக்கெட்டினை இழக்க, களத்திற்கு தோனி வந்தார்.

ஜடேஜாவுடன் இணைந்த தோனி பவுண்டரிகள் விளாசுவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசி மிரட்டி விட்டார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் தோனி சிக்ஸர் விளாசுவாரா என காத்துக்கொண்டு இருந்தபோது, போட்டியின் 18வது ஓவரில் தோனி கவர்ஸ் திசையில் அசத்தலான சிக்ஸர் விளாசினார்.

கடைசி இரண்டு ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய முகேஷ் குமார் 5 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து அசத்தலான ஓவரை வீசினார். இதனால் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் இருந்த தோனி முதல் பந்தை பவுண்டரிக்கும், இரண்டாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தனர். இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் இருந்த தோனி 16 பந்தில் 4 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 37 ரன்கள் குவித்திருந்தார்.

Source link