புதுச்சேரி கோரிமேடு ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 48). இவர் பெயிண்டராக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா தேவகிருபை (வயது 44). கடந்த 19 ஆம் தேதி பாஸ்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி கதிர்கிராமம் அரசு மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் ஷர்மிளா தேவகிருபையை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அப்போது ஷர்மிளா தேவகிருபை, காதலன் சேகர் மற்றும் நண்பர்கள் 2 பேரின் உதவியால் பாஸ்கரை கொலை செய்ததாக கூறினார். இது தொடர்பாக அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கடலூர் சின்னப்பன் நாயக்கம்பாளயத்தை சேர்ந்த சந்திரசேகரன் என்ற சேகர் புதுச்சேரி சுந்திரமேஸ்திரி நகரில் 15 வருடமாக தையல் கடை நடத்தி வருகிறார். அங்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வேலை பார்த்ததாகவும், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த பழக்கம் பாஸ்கருக்கு தெரிய வரவே, ஷர்மிளா தேவகிருபையை கண்டித்ததுடன் வேலைக்கு செல்லக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஷர்மிளா மற்றும் சேகர் தொடர்ந்து திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு இடையூறாக இருக்கும் பாஸ்கரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் சேகர் மற்றும் அவரது நண்பர்கள் நெல்லித்தோப்பை சேர்ந்த மணிகண்டன் (37) முதலியார்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (32) ஆகியோர் சேர்ந்து பாஸ்கரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக சேகர், பாஸ்கரை தொடர்பு கொண்டு பெயிண்டிங் வேலை இருப்பதாக கூறி இடத்திற்கு வரவழைத்தார். அப்போது சேகர் மற்றும் இரண்டு பேரும் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்தனர். அங்கிருந்து அவரது உடலை ஆட்டோவில் ஷர்மிளா தேவகிருபை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஷர்மிளா உடனடியாக ஆட்டோவில் ஏறி பாஸ்கருக்கு நெஞ்சி வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மை தெரிய வரவே ஷர்மிளா தேவகிருபையை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல் துறையினர். சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.