மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என மும்பையில் நடைபெறும் இந்தியா அணி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ராகுல் நடைபயணம்:
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தின் நிறைவு விழா மும்பையில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்திய கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான பயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார் ராகுல் காந்தி.
மும்பைக்கு வந்த இந்தியா கூட்டணி, விரைவில் டெல்லியை அடையும். “மக்களுக்காக உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளோம். இந்தியாவின் இதயத்தை புரிந்து கொள்ள ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளார். ”பாஜகவால் அழிந்து போன இந்தியாவை மீட்கும் பயணம் இது”. மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.
மத்தியில் மதச்சார்பற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை இந்திய அணி அமைக்கும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
VIDEO | Bharat Jodo Nyay Manzil: Tamil Nadu CM MK Stalin (@mkstalin) felicitates Congress leader Rahul Gandhi (@RahulGandhi) at INDIA bloc’s mega rally in Mumbai.#BharatJodoNyayManzil pic.twitter.com/OkMRynXPET
— Press Trust of India (@PTI_News) March 17, 2024
”இலக்கு”:
இந்தப் பயணம் ராகுல் காந்தி என்ற தனிமனிதரின் பயணம் இல்லை. இது இந்தியாவுக்கான பயணம். அதனால்தான் இது இந்திய ஒற்றுமை நியாயப் பயணம். (Bharat Jodo Nyay Yatra) இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்தாண்டுகளில் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பயணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.
பா.ஜ.க.வை நாம் இப்போதே நிறுத்தி ஆகவேண்டும். அதுதான் நம் இலக்கு! இந்தியா கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பா.ஜ.க தவிர்க்கத் தொடங்கிவிட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் பிரதமர் மோடி நம் கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பா.ஜ.க.தான் என்பதைத் தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. 8,000 கோடி ரூபாயைத் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியது யார்? இது பா.ஜ.க.வின் நவீன ஊழல்! இப்படிப்பட்ட பிரதமர் ஊழல் குறித்து வாய்திறக்கலாமா? தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம் சாட்டுகிறார்.
நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக அன்று! இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சகோதரர் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பா.ஜ.க.வால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பா.ஜ.க.வை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பா.ஜ.க.வை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்.