Calcutta High Court directs West Bengal govt to Hand Over Shahjahan Sheikh To CBI Today | சந்தேஷ்காலி விவகாரம்! ஷாஜகான் ஷேக்கிற்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்


மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய பிரமுகராக இருந்து வந்தவர் ஷேக் ஷாஜகான். இவர், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் நிலங்களை அபகரித்து, அங்குள்ள பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் எழுந்தது.
பற்றி எரியும் சந்தேஷ்காலி விவகாரம்:
இதனால், அவர்கள் மீது நடவடிக்கை  எடுக்கக் கோரி சந்தேஷ்காலியில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம், நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியதை தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
பின்னர், நில அபகரப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஷேக் ஷாஜகானின் உதவியாளர்கள் ஷிபர்சாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், ஷேக் ஷாஜகான் தலைமறைவானார். இதற்கு மத்தியில், அவருக்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஷேக் ஷாஜகானை மேற்குவங்க காவல்துறை கைது செய்தது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து, அவரை கட்சியில் திரிணாமுல் காங்கிரஸ் நீக்கியது. ஆனால், ஷேக் ஷாஜகானை மேற்குவங்க காவல்துறை பாதுகாத்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டி வந்தது.
ஷாஜகானுக்கு வேட்டு வைத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்:
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய சிபிஐ மற்றும் காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறையும் மேற்குவங்க அரசும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தன.
வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என அமலாக்கத்துறையும் மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என மேற்குவங்க அரசும் கோரிக்கை விடுத்தது. இந்த மனுக்களை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி. எஸ். சிவஞானம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.
பிரதமர் பிரச்சாரம்:
மேலும், ஷாஜகான் ஷேக் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இதை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
விதிகளின்படி வழக்கு விசாரணை நடைபெறும். நீதிமன்ற பதிவாளர் முன்பு வழக்கை பட்டியலிடும்படி மேற்குவங்க அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியை நீதிமன்றம் கேட்டு கொண்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜக சந்தேஷ்காலி விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக மேற்குவங்கம் வந்த பிரதமர் மோடி, “சந்தேஷ்காலியில் பெண்களுக்கு திரிணாமுல் செய்தது. நாட்டையே கொதிப்படைய செய்துள்ளது” என்றார்.
 

மேலும் காண

Source link