தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. இதனால், பிற மதங்களுக்கு மதமாறுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான அம்பேத்கர் வழியில், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பௌத்தத்திற்கு மதம் மாறுவது அதிகரித்து வருகிறது.

தொடரும் மதமாற்றம்:

குஜராத்தில், ஒவ்வொரு ஆண்டும், தசரா மற்றும் பிற பண்டிகைகளின்போது, தலித்களில் பெரும்பகுதியினர் பெரும் எண்ணிக்கையில் புத்த மதத்திற்கு மாறி வருகின்றனர். குஜராத் பௌத்த அகாடமி (ஜிபிஏ) குஜராத் மாநிலத்தில் இதுபோன்ற மதமாற்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தும் முக்கிய அமைப்புகளில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அகமதாபாத்தில் சுமார் 400 பேர் புத்த மதத்துக்கு மாறினார்கள். இதேபோல் 2022ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கிர் சோம்நாத்தில் சுமார் 900 பேர் புத்த மதத்திற்கு மாறினார்கள்.

கடந்த 2016ஆம் ஆண்டு, உனாவில் தலித் சமூகத்தை சேர்ந்த வஷ்ரம் சர்வையா, ரமேஷ் சர்வையா உள்ளிட்டோரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. பசுவை கொன்றுவிட்டதாக கூறி அவர்களுக்கு கசையடி கொடுத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடுமையாக்கப்படும் மதமாற்ற சட்டங்கள்:

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வஷ்ரம் சர்வையா, ரமேஷ் சர்வையா ஆகியோர் சமீபத்தில் பௌத்தத்திற்கு மதம் மாறினர். இப்படிப்பட்ட சூழலில், குஜராத்தில் மத சுதந்திரச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆசை வார்த்தை கூறியும் கட்டாயப்படுத்தியும் மோசடியான வழயில் நடைபெறும் மதமாற்றத்திற்கு இந்த சட்டம் தடை விதித்தது.

இந்த சட்டத்தின் காரணமாக மத மாற விடாமல் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எழுந்த எதிர்ப்பு அடங்குவதற்குள் இந்த சட்டத்தில் மேலும் ஒரு திருத்தத்தை குஜராத் பாஜக அரசு கொண்டு வந்தது. திருமணத்தின் மூலம் வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

சர்ச்சையை கிளப்பும் பாஜக அரசு:

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் சுற்றறிக்கை ஒன்றை குஜராத் அரசு வெளியிட்டுள்ளது. இந்து மதத்தில் இருந்து பௌத்தம், சமணம், சீக்கிய மதத்திற்கு மாற அரசின் முன் அனுமதி தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003-இன்படி, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்த மதத்திற்கு மாறுவதற்கான விண்ணப்பங்கள் விதிகளின்படி கையாளப்படவில்லை என்பது அரசின் கவனத்திற்கு வந்ததையடுத்து, ஏப்ரல் 8 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த சுற்றறிக்கையில் துணை செயலாளர் (உள்துறை) விஜய் பதேகா கையெழுத்திட்டார். குஜராத் மத சுதந்திரச் சட்டத்தை பொறுத்தவரையில், பௌத்தம் தனி மதமாக கருதப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.