பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிக் பாஸ் 17 வெற்றியாளரான முனாவர் ஃபரூக்கி, சமீபத்தில் மும்பையில் உள்ள முகமது அலி சாலையில் இருக்கும் இனிப்பு கடைக்கு சென்றபோது ஒரு தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டார். அவர் இப்தார் விருந்துக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை தாக்கியது. அவர் மீது முட்டைகளை வீசியதும், திட்டியதும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முனாவர் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதற்கு முன்பு இனிப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு நின்றுகொண்டிருந்த போதுதான் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

ஒரு உணவகத்தின் உரிமையாளரும் தொழிலாளர்களும் அந்த இனிப்பு கடைக்குள் புகுந்து முனாவரை தாக்கியுள்ளனர். அவர்கள் முனாவர் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியாக ஸ்வீட் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் முனாவர் ஃபரூக்கியை மினிரா மஸ்ஜிதில் உள்ள தனது உணவகத்தில் இப்தார் விருந்துக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் வேறு உணவகத்திற்குச் சென்றதாகவும், அதைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக ஹுக்கா பாரில் நடந்த சோதனையில் முனாவர் தனது நண்பர்களுடன் புகைபிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

முனாவர் ஃபருக்கி தனது வாழ்க்கையை ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 17 -ல் பங்கேற்றார். அங்கு அவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.