ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போன்ற முகம் கொண்ட நடிகை அனுஷ்காவை பலருக்கும் பிடிக்கும். தெலுங்கு மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர், மாதவனுடன் ரெண்டு படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மொபைலா மொபைலா என தமிழ் இளசுகளின் மனதில் புகுந்த அனுஷ்காவின் கெரியரை அருந்ததி படம் திருப்பி போட்டது. ஹீரோக்களுக்குடன் ரொமான்ஸ் மட்டும் செய்து வந்த ஹீரோயின்களின் காலத்தில் கம்பீரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் வேட்டைக்காரனில் விஜய்யின் சுசியாகவும் சிங்கம் படத்தில் சூர்யாவின் காவியாகவும் நடித்து கமர்ஷியல் நடிகையாக மாறினார். வானம் படத்தில் வேசி கதாப்பாத்திரத்தில் சரோஜாவாக நடித்து தான் ஒரு போல்டான நடிகை என மீண்டும் நிரூபித்தார்.

மேலும் விக்ரமுடன் தெய்வ திருமகள், தாண்டவம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், சூர்யாவுடன் சிங்கம் 2, ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், அஜித்துடன் என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் இந்த படங்கள் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. இதையடுத்து பிரம்மாண்ட படைப்பான பாகுபலியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதிலும் தனது கட்டழகாலும் கம்பீர நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இதையடுத்து இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டினார். பின்னர், பாகுபலி 2 படத்தில் நடிக்க கூட்டிய எடையை குறைக்க சிரமப்பட்டார்.

பின்னர் பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும் இரண்டாம் பாகத்தில் மாஸ் காட்டி கெரியரின் உச்சிக்கு சென்றார். ஆனால், கம்-பேக் கொடுத்த நடிகை அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா, ‘காத்தனார் – தி வைல்டு சார்சரர்’ எனும் படம் மூலம் மாலிவுட்டில் அறிமுகமாகிறார். மரக்கர் அரபிகடலின் சிம்மம், மலைக்கோட்டை வாலிபன் போன்று இந்த படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. சுமார் 75 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பாகுபலி படத்திற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற அனுஷ்காவின் மார்கெட் சற்று சரிந்ததால் இந்த படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். குறைந்த பட்ஜெட் படங்களில் தரமான படம் எடுத்து பல கோடி வசூலை ஈட்டும் மலையாள சினிமாவில் நடிக்கும் கலைஞர்களுக்கு பெரிதாக சம்பளம் கொடுக்கப்படாத நிலையில், அனுஷ்காவிற்கு மட்டும் இவ்வளவு சம்பளமா என ஒட்டுமொத்த மலையாள சினிமாவே ஸ்தம்பித்துள்ளது.

கோடிக்கணக்கில் சம்பளம் பெரும் ஹிந்தி, தமிழ் சினிமா நடிகர்களுக்கு மத்தியில், அனுஷ்கா வாங்கும் சம்பளம் பெரிய பொருட்டாக தெரியவில்லை என்றாலும், இருக்கும் 75 கோடி பட்ஜெட்டில் 5 கோடியை அனுஷ்காவிற்கு மட்டும் ஒதுக்குவது பெரிதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்திற்கு அனுஷ்கா 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.