பாலிவுட் திரையுலகில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப் பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை லாபம், நஷ்டம் என்பது சகஜமான ஒன்று என்றாலும் படங்களை வெளியிடுவது என்பது சவால் நிறைந்தது. அதுவும் முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகும் காலக்கட்டங்களில் சிறு பட்ஜெட் படங்களுக்கு ஒரு தியேட்டர் மட்டுமல்ல ஒரு காட்சி கூட திரையிட முடியாத அளவுக்கு சிக்கல் இருக்கும். சிறு பட்ஜெட் படங்கள் பல தரமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இதனால் பல படங்கள் ரிலீசாகமல் முடங்கி போயுள்ளதோடு, பல பேரின் வாழ்க்கையும் முடிவுக்கு வந்து விட்டது.

இப்படியான நிலையில் பெரிய நடிகர்கள் படங்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் ஆகியோர்களின் பணப் பிரச்சினை காரணமாக படம் வெளியாகாமல் முடங்கி விடும். ஆனால் ஓடிடி தளங்கள் அந்த எண்ணங்களை முற்றிலுமாக மாற்றி படைப்புச் சுதந்திரத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் 12 ஆண்டுகளாக ரிலீசுக்கு காத்திருக்கும் அமிதாப்பச்சன் படம் ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கே இந்த நிலைமையா என நினைக்கலாம். அப்படி என்ன பிரச்சனை அந்த படத்தில் என பார்ப்போம்.

பிக், விக்கி டோனர், பிகு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஷூஜித் சிர்கார் கடந்த 2012 ஆம் ஆண்டு ஷூபைட் என்ற படத்தை இயக்கினார். இப்படம் Labour Of Love என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் அமிதாப்பச்சன், சரிகா, ஷ்ருஷ் ஜூட்ஷி, சஞ்சிதா ஷேக், நவாசுதீன் சித்தி என பலரும் நடித்திருந்தனர்.ஷூபிட் படம் முதலில் ஹாலிவுட்டில் வெளியிடப்பட்டு பின்னர் இந்தியில் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது தான் 12 ஆண்டுகள் இப்படம் கிடப்பில் கிடப்பதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஷூஜித், “ஷூபிட் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம். அமிதாப் பச்சனுடன் இது எனக்கு முதல் படம். அந்த கதாபாத்திரத்திற்கு அவர் எப்படி நியாயம் செய்திருக்கிறார் என்பதை நான் ரசிகர்களுக்கு காட்ட விரும்புகிறேன். டயலாக் டெலிவரிக்கு பெயர் பெற்ற அமிதாப்பச்சன், இந்த படத்தில் எதுவும் பேசாமல் நடித்துள்ளார். ஆனால் சில எதிர்பாராத நிகழ்வுகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது. தற்போது அந்த பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சித்து வருகிறோம். இந்தப் படத்தை விரைவில் வெளியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.