விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரம் பணத்தை திரும்பப் பெற வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தங்க மனிதரால் மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பறக்கும்படை

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 16 ஆம் தேதி முதல் பறக்கும் படையினர், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. 50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் கொண்டு செல்லப்பட்டால், அவை பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலமாக பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வகையில் கடந்த மாதத்தில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போது, கர்நாடக மாநிலம், சிமோகாவை சேர்ந்த ஏ.ரெஜிமோன் (53) தொழில்ரீதியாக காரில் புதுச்சேரி நோக்கிச் சென்ற போது, உரிய ஆவணங்களின்றி வைத்திரு ந்ததாக ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

2 கிலோ தங்க நகை அணிந்துவந்த தொழிலதிபர்

தற்போது தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தேர்தல் பிரிவுக்கு தனது நண்பர்களுடன் ரெஜிமோன் வெள்ளிக்கிழமை வந்தார். பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரம் தொகைக்கான ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை அவர் அளித்த நிலையில், தேர்தல் பிரிவு அலுவலர்கள் ரெஜிமோனிடம் அத்தொகையையும், அதற்குரிய சான்றுகளையும் வழங்கினர்.

ரொக்கத் தொகையை பெற வந்த ரெஜிமோன், தனது இரண்டு கைகளில் தங்க பிரேஸ்லட், தங்கக் காப்பு, கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் இரண்டேகால் கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து வந்ததால், ஆட்சியரகத் தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்த அனைவரும் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம்

ரெஜிமோன் கூறும் போது, கர்நாடக மாநிலத்தின் சிமோகா பகுதியைச் சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம். அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது நண்பர்களுடன் ரெஜிமோன் காரில் கர்நாடகம் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.