மூட நம்பிக்கையின் உச்சம்.. மோடி மீண்டும் பிரதமராக விரலை காணிக்கையாக அளித்த நபர்: அதிர்ச்சியில் பாஜகவினர்

அடுத்த 5 ஆண்டுகள், நம்மை ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல், வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வென்று கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது.

மோடியின் வெற்றிக்காக விரலை துண்டித்த நபர்:

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டி கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தனது விரலை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்வார் நகரை சேர்ந்த அருண் வர்ணேகர் என்பவர் இந்த செயலை செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க காளி தேவியிடம் பிரார்த்தனை செய்தேன். அதற்காக, எனது ஆள்காட்டி விரலை தேவிக்கு காணிக்கையாக செலுத்தினேன். மோடிதான் எனது தலைவர்.

நாடு எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கு மோடி தீர்வு கண்டுள்ளார். அவரால் நமது நாடு உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றி பெற வேண்டும் என்று பலரைப் போலவே நானும் விரும்புகிறேன்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார். மும்பையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், தனது தாயாரை பார்த்து கொள்வதற்காக சொந்த ஊரான சோனார்வாடாவுக்கு திரும்பினார். அப்போதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்:

அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, இந்த சம்பவத்தால் பாஜக தலைவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கர்வார் நகர பாஜக நிர்வாகி ஜெகதீஷ் நாயக் கூறுகையில், "இது மடத்தனம். இதுபோன்ற செயல்களைச் செய்யாமல், மோடியின் சாதனைகளைப் பற்றி மக்களிடம் சொல்ல வேண்டும். அப்படி செய்தால்தான், மோடி மகிழ்ச்சி அடைவார்" என்றார்.

இதுகுறித்து உள்ளூர் பாஜக தலைவர் நந்த கிஷோர் கூறுகையில், "இது உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். மோடி வெற்றி பெற வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம். மற்றவர்கள் பாராட்டும் வகையில் மோடி மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். ஆனால் இந்த வழியில் இல்லை" என்றார்.

இதையும் படிக்க: "தமிழ் கலாசாரத்தை சீரழித்துவிட்டனர்" திமுக, காங்கிரஸ் மீது பாஜக தேசிய தலைவர் நட்டா அட்டாக்!

Source link