இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தேர்தலில் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜகவும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது.

இந்தியா உற்று பார்க்கும் அண்டை நாட்டு தேர்தல்:

சொந்த நாட்டில் நடைபெறும் தேர்தலுக்கு இணையாக அண்டை நாட்டு தேர்தலையும் இந்திய மக்கள் உற்று கவனித்து வருகின்றனர். அது வேறும் எந்த நாடும் அல்ல, இந்தியாவுக்கு சமீப காலமாக குடைச்சல் தந்து வரும் மாலத்தீவுதான்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் முக்கியமான நாடாக இருப்பது மாலத்தீவு. இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அந்நாட்டுடன் இணக்கமான உறவை இந்தியா பேணி வருகிறது. இதனால், மாலத்தீவில் பல திட்டங்கள், இந்தியாவின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பேணி வந்த அதிபர் முகமது சோலி, மாலத்தீவு அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தார். கடந்தாண்டு நவம்பர் மாதம், மாலத்தீவில் சீன ஆதரவு முகமது முய்சு அரசாங்கம் அமைந்ததில் இருந்தே, இந்திய – மாலத்தீவு நாடுகளுக்கு இடையே நிலவி வந்த சுமூகமாக உறவு பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

சீன ஆதரவு அதிபருக்கு செக் வைக்கப்படுமா?

இந்தியாவுக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றினார். இதை தவிர, பல்வேறு விவகாரங்களில் இந்திய, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது.

மாலத்தீவு நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில் 93 உறுப்பினர்களை கொண்டது. இதற்கான பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது அதிபரை தேர்வு செய்தவற்கான தேர்தல் அல்ல. மாலத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல்.

இந்த தேர்தலின் முடிவுகள் என்னவாக இருந்தாலும் முகமது முய்சுவே அதிபராக தொடர்வார். ஆனால், அதிபரின் கொள்களை திட்டங்களை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவு தேவை. இந்த தேர்தல் முடிவுகளை வைத்தே அது அமையும்.

தற்போதைய அதிபர் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் மைனாரிட்டி கூட்டணி அரசை நடத்தி வருகிறது. இந்திய ஆதரவாளராக பார்க்கப்படும் முன்னாள் அதிபர் முகமது சோலியின் மாலத்தீவு ஜனநாயகக் கட்சி, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. அக்கட்சிக்கு 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தனது கொள்கை முடிவுகளை அமல்படுத்த முய்சு முயற்சித்த போதிலும், அது இந்தியாவுக்கு எதிராக உள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டு வருகிறது.