இந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த திரையுலகம் தமிழ் திரையுலகம் ஆகும். அதற்கு திரைக்கதை, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இசை, ஒளிப்பதிவு என ஏராளமான காரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு மொழிகளை கடந்த ரசிகர்கள் உள்ளனர்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை:

குறிப்பாக, தமிழ் சினிமா தாங்கிய அளவிற்கு தத்துவ பாடல்களை வேறு எந்த மொழி சினிமாவும் தாங்கியிருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி கொடிகட்டி பறந்த காலத்தில் ஏராளமான தத்துவ பாடல்கள் வெளியாகியுள்ளது. இன்று வரை அந்த பாடல்கள் மக்களின் கவலைகளுக்கு மருந்தாக அமைந்து வருகிறது.

அந்த வகையில், காலத்தை கடந்து என்றும் ரசிகர்கள் மனதில் அரசாட்சி செய்பவர் கவிஞர் கண்ணதாசன். மனிதனின் அனைத்து உணர்வுகளுக்கும் பாடல் எழுதிய மாமேதை கண்ணதாசன் ஆவார். உலகின் யதார்த்த வாழ்க்கையையும், வெற்றி, தோல்வி, காதல், திருமணம், சொந்தங்கள் என அனைத்தையும் ஒரே பாடலில் உலகிற்கு சொல்லியிருப்பார் கண்ணதாசன். அந்த பாடலே புத்தியுள்ள மனிதரெல்லாம்.

இந்த பாடலின் முதல் வரியிலே,

"புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.."

என்று எழுதியிருப்பார்.

கண்ணதாசனின் வரிகள் எந்தளவு உண்மை மற்றும் யதார்த்தம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால், திறமையான அனைவருக்கும் வாய்ப்புகளும், வெற்றிகளும் எளிதில் கிட்டிவிடுவதில்லை. அதேசமயம், சில துறைகளில் வெற்றி பெறுபவர்கள் திறமையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருடைய துணையாலோ அல்லது தனது செல்வாக்கைப் பயன்படுத்தியோ அவர்கள் அந்த வெற்றியை பெற்றிருப்பார்கள். அதையே கண்ணதாசன் அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்.

பணம் இல்லாவிட்டால் சொந்தமும் துன்பம்:

இதே பாடலின் பல்லவியில்,

"பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை..

மனமிருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை..

பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்..

பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்.."

என்று எழுதியிருப்பார்.

இந்த வரிகளையும் நமது வாழ்க்கையுடன் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும். அடுத்தவருக்கு உதவ வேண்டும், நம்மால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்கலாம். ஆனால், அதைச் செய்வதற்கு தேவையான பணம் நம்மிடம் இல்லாமல் இருக்கும்.

ஆனால், போதுமான அளவிற்கு பணம் உள்ள மனிதர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதையும் நாம் பார்த்திருப்போம். மேலும், போதுமான அளவு செல்வம் இல்லாதவர்களை உறவினர்களே உதாசீனப்படுத்துவார்கள் என்பதையும், அதுவே நம்மிடம் போதுமான அளவு பணம் இருந்தால் உறவினர்கள் போல பலரும் உரிமையுடன் பழகுவார்கள் என்பதையும் கூறியிருப்பார். மேலே உள்ள வரிகளில் மனிதர்களின் குணத்தை மிக அழகாக கண்ணதாசன் எடுத்துக் காட்டியிருப்பார்.

காதல் – திருமணம் – மரணம்:

அதற்கு அடுத்த பல்லவியில்,

"பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை..

காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை..

மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை..

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை.."

என்று எழுதியிருப்பார்.

இந்த வரிகளும் நமது வாழ்விற்கும், நமது மனதிற்கும் நெருக்கமாக அமைந்திருக்கும். பதின்ம வயதை கடந்த அனைவரும் காதலிப்பதில்லை. இன்றைய சூழலில், பெரும்பாலோனார் காதலித்தாலும் அந்த காதல் திருமணத்தில் முடிவதில்லை என்றும், பெற்றோர்கள் நடத்தி வைத்தாலும் அல்லது காதல் திருமணங்களாக இருந்தாலும் அந்த மணமக்கள் அனைவருமே சேர்ந்து வாழ்ந்துவிடுவதில்லை என்றும், சந்தர்ப்ப சூழலால் பிரியும் சூழல் ஏற்பட்டு விடுகிறது என்றும், இறுதி வரை சேர்ந்து வாழும் மணமக்கள் அனைவருமே சாவிலும் ஒன்றாக இருக்கப்போவதில்லை என்பதையும் தனது வார்த்தைகளால் கண்ணதாசன் நமக்கு உணர்த்தியிருப்பார்.

அதேபோல, அடுத்த பல்லவியில்

"கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு..

அவன் காணுகின்றன கனவினிலே வருவதெல்லாம் உறவு..

அவன் கனவில் அவள் வருவாள்..

அவனைப் பார்த்து சிரிப்பாள்..

அவள் கனவில் யார் வருவாள்..?

யாரைப் பார்த்து அணைப்பாள்..?"

என்று எழுதியிருப்பார்.

கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கும் மனிதனுக்கு, அவனது இலக்குகள் அனைத்தும் கனவாகவே போய்விடும் என்பதையும், எந்த பெண்ணையோ அவன் நினைத்து உருகிக் கொண்டிருக்க, அந்த பெண் யாரை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறாளோ? என்று இளைஞர்களின் வாழ்க்கையும், தவிப்பையும் எழுதியிருப்பார்.

கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் வரிகளுக்கு சந்திரபாபு தனது அருமையான நடிப்பாலும், நடனத்தாலும், குரலாலும் உயிர் கொடுத்திருப்பார். 1962ம் ஆண்டு வெளியான அன்னை படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. ப்ளாக்பஸ்டர் படமான இந்த படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் இன்றளவும் யூ டியூபில் பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. அடுத்த தொடரில் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கலாம்.