பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

அரசியல் சாசனத்தை மாற்ற முயற்சியா?

தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், லாலுவின் குற்றசாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். பீகார் மாநிலம் கயாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "மோடியோ அல்லது பாஜகவோ ஏன் பாபாசாகேப் அம்பேத்கரே நினைத்தாலும் கூட அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய பிரதமர், "அரசியல் சாசனத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்த விரும்புபவர்கள், தங்கள் காதுகளைத் திறந்து வைத்து கொண்டு நான் சொல்வதை மிகவும் கவனமாக கேட்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக நீங்கள் மிரட்டி, பயமுறுத்தி வந்த மக்களுக்கு பொய்யான கதைகளை சொல்லி வந்தீர்கள்.

பொதுக்கூட்டத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி:

பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஆட்சிக்கு வந்தால் நாடே பற்றி எரிந்து விடும் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்த காலம் உண்டு. அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் இருந்து பல மாநிலங்களில் ஆட்சி செய்து அமைதியான ஆட்சியை அளித்தோம்.

பாஜக முன்னோக்கி செல்லும் போதெல்லாம், அரசியல் சட்டத்தை தங்கள் ஆயுதமாகப் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக, சொன்னதையே சொல்லி வருகிறார்கள். அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பொய்களை பரப்புகிறார்கள்.

சகோதர சகோதரிகளே, மோடியோ அல்லது பாஜகவோ, பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரால் கூட இந்த அரசியலமைப்பை மாற்ற முடியாது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பொய்களைப் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். சனாதன தர்மத்தை தவறாக பேசுபவர்கள் அரசியலமைப்பை உருவாக்கிய அரசியலமைப்பு சபையில் 80 முதல் 90 சதவிகித உறுப்பினர்கள் சனாதனிகள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பை ராஷ்டிரிய ஜனதா தளம் அரசியலாக்குகிறது. அதேசமயம், பாஜக அதை எப்போதும் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் நடத்துகிறது. அரசியல் சாசனத்தை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தும் இதுபோன்றவர்களுக்கு பொது வாழ்வில் இடமளிக்கக் கூடாது. பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் இப்படிப்பட்டவர்களை என்றென்றும் அமைதியாக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.