Last Updated:
ஜூன் 4-ஆம் தேதி ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஜூன் 5-ஆம் தேதி எண்ணூர்–கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறவுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் உதவி சாதனங்கள் பலருக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்காத சூழல் நிலவுகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயசார்பு வாழ்க்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்களைக் குறைக்க, தேவைக்கேற்ப உதவி உபகரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
தனிநபரின் உடல்நிலை மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்து பொருத்தமான கருவிகளை வழங்கும் நோக்கில், அரசு மற்றும் சமூகப் பொறுப்பு நிதி ஆதரவுடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் கத்திவாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்காக இரண்டு நாள் மதிப்பீட்டு மற்றும் அளவீட்டு முகாம் நடைபெற உள்ளது. மத்திய அரசின் ALIMCO நிறுவனம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு நிதி ஒத்துழைப்பில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை ஜூன் 4-ஆம் தேதி ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஜூன் 5-ஆம் தேதி எண்ணூர்–கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறும்.
பார்வை, செவித்திறன், பேச்சுத்திறன் மற்றும் உடல் இயக்கக் குறைபாடு கொண்டோர், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் ஆட்டிசம் பாதிப்புடையோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இந்த முகாம் பயனளிக்கும். பிரெய்லி கடிகாரம், வெள்ளைக் குச்சி, காதொலி கருவி, ஊன்றுகோல், கைத்தாங்கி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனம், செயற்கை கை மற்றும் கால் உறுப்புகள் உள்ளிட்ட பல உதவி சாதனங்கள் வழங்கப்பட உள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ், ஆதார் அட்டை, யுடிஐடி அட்டை, புகைப்படம் மற்றும் மாத வருமானம் ரூ.22,500-க்குள் இருப்பதற்கான வருமானச் சான்றிதழ் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் வர வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
Chennai,Tamil Nadu























