”தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்ற மகாகவியின் வார்த்தைகளின்படி தொன்மையான இந்திய அன்னை ஏராளமான தலைவர்களை இந்த உலகிற்குத் தந்திருக்கிறாள். ஆன்மீகத்தில் கரை கண்ட பல மகத்தான ஞானிகள் இந்த மண்ணை மலரச் செய்திருக்கிறார்கள். அந்த நெடும் பட்டியலில் சுவாமி விவேகானந்தருக்கு எப்போதும் இடமுண்டு.

விவேகானந்தரின் சொற்கள்:

சுதந்திரம் பறிக்கப்பட்டு, கல்வி நசுக்கப்பட்டு, அடிமைச் சங்கிலியால் இந்தியாவே பூட்டப்பட்டிருந்த காலம். இருட் காட்டைக் கிழித்து வெளிச்சப் புள்ளிகளை வீசியெறியும் வலிமை கொண்ட தலைவனுக்காக இந்தியா காத்திருந்த காலம். அந்தக் காலமே மேற்கு வங்கத்தில் நரேந்திரனாகப் பிறந்தவரை விவேகானந்தராக மாற்றியது.

ஆன்மீகம் என்றாலே சாஸ்திரங்களும் பழங்கால வழிபாட்டு முறைகளுமாகக் கருதப்பட்ட நேரத்தில் ”எழுமின், விழுமின் உழைமின்” என்ற விவேகானந்தரின் சொற்கள் இளைஞர்களை சுண்டி இழுத்தன. ”தாழ்ந்த மக்களுக்கு கல்வியைக் கொடுப்போம். அதுவே இந்தியா தனது புகழை மீண்டும் அடைய ஒரே வழி” என முழங்கினார். அவரது சொற்கள் செயல்வடிவம் பெற்றபோது சுருண்டு கிடந்த சமூகத்தின் நரம்புகளில் புது ரத்தம் பாய்ந்ததை உலகறியும்.

ஆன்மீக சமூக சீர்த்திருத்தவாதி:

ஆன்மீகத்திற்கான நீள, அகலங்களை மாற்றியமைத்த சமூக சீர்திருத்தவாதியாகவே விவேகானந்தரை காலம் வரவு வைத்திருக்கிறது. பழமைகளுக்குள் பொதிந்துவிட்ட முதியவர்களுக்கு விவேகானந்தரின் வார்த்தைகள் புதிய ஒளியைக் கொடுத்தது. வேகமாக மாறிவரும் சமூகத்திற்குப் பொருத்தமான கல்வி, ஆரோக்கியம், சமூக மறுமலர்ச்சி என விவேகானந்தர் வகுத்துக்கொண்ட பாதையில் லட்சோப லட்ச இளைஞர்கள் இணைந்துகொண்டார்கள். அந்த இளைஞர்களை விடுதலை என்ற பெருந்தவத்தினை நோக்கி நகர்த்தி சென்றார்.

அக விடுதலையே வளர்ச்சியின் வழி என தீர்க்கமாகச் சொன்னார் விவேகானந்தர். இலக்கை நோக்கிய பயணத்தில் எவையெல்லாம் தடையாக இருக்கின்றனவோ, அவற்றை கண்டறிந்து அதிலிருந்து விடுபடுவதலே சுய விடுதலை. இந்த விழிப்பு நிலையை ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் ஏற்படுத்தவே விவேகானந்தர் முயன்றார். எளிமையாகச் சொல்வதென்றால் விவேகானந்தரின் பணி ஒரு சீடனை உருவாக்குவது அல்ல; இன்னொரு விவேகானந்தரை உருவாக்குவது.

அகத்தில் இருக்கும் இருள் ஒழிய வேண்டுமானால் ஒவ்வொருவருக்குள்ளும் கல்வி எனும் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவருடைய வார்த்தைகளில் சொல்வதென்றால்,”ஒழுக்கத்தையும் மனவலிமையையும் பரந்துபட்ட அறிவையும் கொடுப்பதே சிறந்த கல்வி. வெறும் தரவுகளை சேகரிப்பதாக அல்லாமல் மனிதனை முழுமையடையச் செய்வதே கல்வி”.

விவேகானந்தரின் லட்சியம்:

தீமைகள் நிரம்பிய மனம் கொண்ட ஒருவரிடம் கல்வி சென்றால் தீமை இன்னும் கூர்மையடையும். அதனாலேயே அற உணர்வை முதலில் வளர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். அறத்தின் கரைகளுக்குள் பெருகும் ஏரியாக கல்வி இருத்தல் வேண்டும். அப்போதுதான், சமுதாய நீரோட்டத்தை வளர்ச்சி எனும் கடலில் சேர்க்க முடியும்.

உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நாளைய இந்தியாவை தோளில் சுமக்கப்போகும் இளைஞர்கள் சுவாமி விவேகானந்தர் வகுத்த பாதையில் பயணித்தால் இன்னும் சில ஆண்டுகளில் அனைத்திலும் தன்னிறைவு அடைந்த தேசமாக இந்தியா மாறும். அதுவே, சுவாமி விவேகானந்தரின் லட்சிய வாழ்க்கைக்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

- டாக்டர். ஐசரி கே கணேஷ்
நிறுவனர் & வேந்தர், வேல்ஸ் பல்கலைக்கழகம்