Summer tips how to prevent from heat waves children aged people following tips | Summer Tips: தமிழகத்தைத் தாக்கும் வெப்ப அலை; கோடையில் என்ன செய்யலாம்


தமிழகத்தில் வெப்ப அலை கடுமையாகப் பேசி வரும் நிலையில், மக்கள் என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் அறிவுரைகளை வழங்கி உள்ளார். 
தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்கி, வெப்ப அலை மிகக் கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வரும் சூழலில், அதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை ஃபரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளதாவது:
வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாவது. இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதைத் தடுப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் முதல் இடம் பிடிக்கின்றன.
உடல் சூடாவதை தடுப்பது எப்படி?

தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத ஊர்களில், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.


தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் ஊர்களில், ஒரு வேளை குளிர்ந்த நீர் குளியல் மற்றும் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கை கால் முகம் போன்றவற்றை கழுவலாம். இது உடலின் உஷ்ணத்தை தணிக்க உதவும்.


வெப்பத்தை உள்ளயே தக்க வைக்கும் உடைகளான கம்பளி / லினன் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஜீன்ஸ் அணிவதைத் தவிர்ப்பது நல்லது. பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. வெப்பத்தை தக்க வைக்கும் கருப்பு நிற ஆடைகளைத் தவிர்ப்பது சிறந்தது.

வேறு என்ன முக்கியம்?

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடை / தொப்பி எடுத்துச் செல்ல வேண்டும். முடிந்தவரை , வெயில் நம் உடல் மீது நேராக படாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.
வெயில் தணல் அதிகமாக இருக்கும் நேரங்களில் குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம். வெளியே சென்று விளையாடுவதை காலை நேரம் மற்றும் மாலை நேரத்திற்குத் தள்ளி வைக்கலாம்.

சூரியனின் வெப்பமானது மூன்று முறைகளில் நம் மீது தாக்கலாம்
ஒன்று – conduction
இரண்டாவது – convection
மூன்றாவது – radiation
இதில் முதலாவதாக இருக்கும் conduction-க்கு நாம் ஏற்கனவே சூடான ஒரு பொருளோடு தொடர்பில் இருந்தால் நடப்பது. அதாவது , வெயிலில் நின்ற ஒரு பைக் மீது நாம் ஏறி உட்கார முற்படும் போது , அதன் வெப்பம் நமக்கும் பரவும்.
இதை தவிர்க்க முடிந்த வரை நிழலில் வண்டியை நிறுத்தலாம் அல்லது சீட்டில் உட்காரும் முன் நல்ல கடினமான துணியை விரித்து உட்காரலாம்.
இரண்டாவது வகை convection
அதாவது காற்றை சூடாக்கி விட்டால் போதும். அதனுடன் தொடர்பில் இருக்கும் நமக்கும் வெப்பம் கடத்தப்படும்.
இது நாம் வீட்டினுள் இருந்தாலும் சரி , நம்மை தாக்கியே தீரும். பொதுவாக அடைக்கப்பட்டு நிறுத்தப்பட்ட கார் போன்ற வாகனங்களுக்குள் சென்ற உடன் தாக்கும் வெப்பம் இந்த வகை. நமது வீட்டின் ஜன்னல்களில் தண்ணீரில் முக்கிய துணிகளைக் காயப்போடலாம். இதன் மூலம் வீட்டினுள் வரும் காற்று சிறிது ஈரப்பதம் கலந்து வரும்.
நாம் போடும் மின்விசிறி. வெளியே இருக்கும் வெப்பக் காற்றையும் மேலே சூடான தளத்தின் காற்றையும் நம் மீது தள்ளும். அதனால்தான் என்ன வேகமாக ஃபேன் சுழன்றாலும் வெப்பம் தணியாமல் இருக்கும்.
கார் உபயோகிப்பவர்கள் கார் கண்ணாடிகளை உடனே நன்றாக திறந்து விட வேண்டும்.
ஏசியை உடனே போடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் அந்த ஏசி மெசினும் 100 டிகிரிக்கு மேல் சூடாகி இருக்கும். அதில் இருந்தும் வெப்பக் காற்றே வரும்.
மூன்றாவது Radiation
இதற்கு காற்று போன்ற எந்த கடத்தியும் தேவையில்லை. மின் காந்த அலைகளான இந்த வெப்பம் நம்மை நேரடியாக தாக்கி நம் உடலை சூடாக்கும்.
நம் வீட்டில் கிச்சனில் உபயோகப்படுத்தும் மைக்ரோ வேவ் அவன் இந்த முறையில்தான் இயங்குகிறது.
இந்த முறையில் சூடாகும் நம் உடல் எப்படி இந்த சூட்டை தானாக தணித்துக்கொள்கிறது? அதற்கு காரணம் “Evapouration” எனும் தற்காப்பு முறை.
அதிகமாக உடல் சூடானால், நமது உடலில் வேர்வை அதிகமாக சுரக்கும். அந்த வேர்வை உடலை குளிர்விக்க முயற்சிக்கும் (sweating) மேலும் உடலுக்குள் உள்ள உஷ்ணத்தை நமது நுரையீரல் வெளியிடும் மூச்சுக்காற்று வழி அனுப்ப முயலும் (expiration)
இப்படி நம் உடல் அதிக நீர்ச்சத்தை உபயோகித்து குளிர்விப்பதால் ஏற்படும் பிரச்சனை Dehydration – நீர்ச்சத்து குறைதல்..
இதை எப்படி அறியலாம்?
– நாக்கு வறண்டு போதல்
– சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல்
– தசைப்பிடிப்பு
– தலை சுற்றல்
– கை கால் தளர்வு போன்ற அறிகுறிகளால் அறியலாம்
இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
எளிதான வழி – தண்ணீரைப் பருகுவது.
நமது சிறுநீரகங்கள் சரியாக இயங்க குறைந்தபட்சம் ஒருவரின் எடைக்கு கிலோ ஒன்றிற்கு முப்பது மில்லி லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு பருகி ஆக வேண்டும்.
உதாரணம்
60 கிலோ எடை உள்ள ஒருவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டிலேயே இருந்தாலும் சரி. வெயில் காலமோ குளிர்காலமோ அவர்
60 ( கிலோ) × 30 ( மில்லி) = 1800 மில்லி லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் பருக வேண்டும். இந்த தண்ணீரின் உட்கொள்தல் அளவு அவர் செய்யும் வேலைகளைப் பொறுத்து அதிகமாகும்.
இன்னும் வெப்ப சலனம் நிலவும் காலங்களில் 30 மில்லி லிட்டர் என்பது 60 மில்லி லிட்டர் அளவு குறைந்தபட்ச தேவையாக மாறும்.
உங்கள் பள்ளி செல்லும் குழந்தையின் எடை 20 கிலோ என்றால்  இந்த வெப்ப சலனத்தில் அவர்களின் குறைந்த பட்ச தேவை ஒரு கிலோவுக்கு 60 மில்லி லிட்டர் என்று கொண்டால்  20 (கிலோ) * 60 ( மில்லி லிட்டர் ) = 1200 மில்லி லிட்டர். அதாவது 1.2 லிட்டர் கட்டாயம் பருக வேண்டும்
வளர்ந்த ஆணும் பெண்ணும் பொதுவாக, 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகுவது சிறந்தது.
இந்த தண்ணீரை இளநீராக, மோராக, லஸ்ஸியாக, பழச்சாறாக எப்படி வேண்டுமானாலும் பருகலாம்.
செயற்கை குளிர்பானங்கள், ரசாயன கலர் பொடிகள் கலந்த கலவைகளை தவிர்ப்பது நல்லது.
குளிர் நீர் பருகுவது சிறந்தது. அதேநேரம் மிக அதிகமான குளிர்ச்சி தரும் நீரை பருகுவது தொண்டைக்குக் கேடு விளைவிக்கும்.
ஆற்று மணல் பரப்பி அதில் நீர் ஊற்றி அதன் மீது வைத்தமண்பானையில் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை ஊற்றி குளிர்வித்து குடிப்பது சிறந்தது.
வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்?

வெப்ப சலனத்தால் பாதிக்கப்பட்டவரை உடனே நல்ல குளிர்ச்சியான இடத்துக்கு அல்லது நிழலான பகுதிக்கு மாற்ற வேண்டும்.
அவரது மேலாடைகளை கழற்றி விட வேண்டும். நன்றாக உடலில் காற்று பட வேண்டும்.

     3. அவரை காலை நீட்டி படுக்க வைக்க வேண்டும்.

காற்றாடி / மின்விசிறியை இயக்கி குளிர்விக்க வேண்டும்.
சுற்றி ஆட்கள் நின்று கொண்டு காற்று அவருக்கு செல்வதை தடுக்கக்கூடாது.
தண்ணீரில் நனைத்த துணியைக் கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

     7. கால்களை சிறிது உயரத்தூக்கி வைக்க வேண்டும்

சிறிது நினைவு திரும்பியதும் அமர வைத்து, தண்ணீரை வழங்க வேண்டும்.
911 / 108-க்கு அழைத்து உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வேண்டும்

யாரெல்லாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்?

குழந்தைகள்
முதியோர்கள்
நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்
கர்ப்பிணிகள்
வெயிலில் நின்று வேலை செய்யும் தொழிலாளிகள்
அதிகமாக பயணம் செய்பவர்கள்

இவர்கள் அதிக கவனம் தேவைப்படுபவர்கள் ஆவர்.
இவ்வாறு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Source link