நாளை சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு பந்தளில் இருந்து திருவாபரண பெட்டி சபரிமலைக்கு புறப்பட்டது.

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.

இந்த காலக்கட்டத்தில் 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் நிலையில் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினசரி வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனால் சுமார் 18 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவாபரணங்கள் நேற்று அதிகாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின் 12 மணியளவில் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பாரம்பரிய பெரு வழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நாளை மதியம் பம்பை சென்றடையும்.

அதன்பின் அங்கிருந்து பக்தர்கள் சூழ நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். திருவாபரணப் பெட்டிக்கு திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். அதனை தொடர்ந்து 18 ஆம் படி வழியாக சன்னதிக்கு கொண்டு செல்லப்படும். அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தீபாராதனைக்கு பிறகு பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி அளிப்பார் என்பது ஐதீகம்.

ஜோதி வடிவில் சாமி காட்சியளிப்பதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்கான ஏற்பாடுகள் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த நிகழ்வுக்காக பக்தர்கள் காத்திருப்பார்கள். சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும்.

மேலும், Virtual queue அதாவது முன்பதிவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி 50,000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகர ஜோதி அன்று அதாவது ஜனவரி 15 ஆம் தேதி 40,000 பக்தர்கள் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதி அதிக கூட்டம் இருக்கும் காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மல்லிகாபுரம் மற்றும் மணிகண்டாஸ் வழியாக தரிசனம் செய்ய வேண்டாம் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் பக்தர்கள் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளதால் வரும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.