பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வரும் நிலையில், மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கடந்த முறை போன்று இல்லாமல் இந்த முறை கணிசமான தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல் காந்தி:
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பிஜப்பூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
தற்போது எல்லாம் பிரதமரின் உரைகளில் பதட்டம் தெரிவதாகவும் இன்னும் சில நாள்களில் அவர் மேடையிலேயே அழ போவதாகவும் கூறினார். தொடர்ந்து விரிவாக பேசிய அவர், “உங்கள் கவனத்தை மோடி திசை திருப்ப முயற்சிக்கிறார்.
சில சமயங்களில் சீனா, பாகிஸ்தானைப் பற்றிப் பேசுகிறார். சில சமயங்களில் தட்டுகளை தட்ட சொல்கிறார். உங்கள் மொபைல் போன்களின் டார்ச் லைட்டை ஆன் செய்யச் சொல்கிறார். பயிற்சித் திட்ட உரிமையை ஒவ்வொரு பட்டதாரிக்கும் இந்தியா கூட்டணி அரசு முதலில் வழங்கும்.
“மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்”
பட்டதாரிகள் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், அரசிடம் 1 ஆண்டுக்கான வேலை வாய்ப்பைக் கேட்கும் உரிமையைப் பெறுவார்கள். பட்டதாரிகளுக்கு தொழிற்பயிற்சி உத்தரவாதம் அளிக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், நாங்கள் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம்” என்றார்.
ஒரு புறம் காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில், மறுபுறம் பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர், “எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிடும்” என பேசினார்.
காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், “2004 இல், ஆந்திரப் பிரதேசத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை.
உண்மை என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள். இது, அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது” என்றார்.
மேலும் காண