Pongal Parisu Thogai 2024 Informed That The Ration Shops Will Be Operational On The 12th Jan 2024 Friday While The Pongal Gift Package Is Being Distributed. | Pongal Parisu Thogai 2024: நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்.. 12 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

Pongal Parisu Thogai 2024: பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட இருக்கும் நிலையில், வரும் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஆனால் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இந்த பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடி இருப்பதாக தெரிவித்துள்ள அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்  என அறிவிப்பு வெளியிட்டது. அதாவது அரிசி அட்டையுடைவர்களுக்கு மட்டுமே இந்த ரொக்கம் வழங்கப்படுகிறது.
இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணி ஞாயிற்றுகிழமை தொடங்கியது. தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது.  டோக்கன் பெற்றவர்கள் வரும் 10 ஆம் தேதி (நாளை) முதல் பொங்கல் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், இந்த வெள்ளிக்கிழமை (12 ஆம் தேதி) ரேஷன் கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளிலும் பயணாளர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பயணாளர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை, முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். டோக்கனில் எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் தொகுப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதி நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த மாதம் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source link