PM Modi : "எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

வெறுப்பை தூண்டும் விதமாக பேசினாரா பிரதமர்?

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது மீதமுள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலை போன்று இந்த முறையும் ராஜஸ்தானில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

இதற்காக, பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமியர்கள் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இது வெறுப்பை தூண்டும் பேச்சு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காவல் நிலையத்திலும் தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இஸ்லாமியர்கள் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து:

இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர், "எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை குறைத்து காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிவிடும்" என பேசியுள்ளார்.

காங்கிரஸை கடுமையாக சாடிய அவர், "2004 இல், ஆந்திரப் பிரதேசத்தில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சித்தது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை.

உண்மை என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ​​தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை உடைத்து தங்களின் சிறப்பு வாக்கு வங்கிக்கு தனி இடஒதுக்கீடு கொடுக்க நினைத்தார்கள். இது, அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது.

தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய இடஒதுக்கீட்டு உரிமையை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்பியது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கை எப்போதும் சமரச அரசியலை மையப்படுத்தியே இருக்கிறது. அதன் கொள்கையே வாக்கு வங்கி அரசியலாகும். 2004ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, ​​அவர்கள் செய்த முதல் காரியம், ஆந்திராவில் எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததுதான்.

காங்கிரஸ் அரசு நாடு முழுவதும் செயல்படுத்த விரும்பிய திட்டம் இது. 2004 மற்றும் 2010 க்கு இடையில், அவர்கள் நான்கு முறை முஸ்லிம் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முயன்றனர். ஆனால், சட்ட ரீதியாக தடைகள் இருந்ததாலும் உச்ச நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை காரணமாகவும் அவர்களால் முடியவில்லை" என்றார்.

இதையும் படிக்க: Modi Speech On Muslims : "உங்க சொத்துக்களை புடுங்கி முஸ்லீம்களுக்கு கொடுத்துடுவாங்க" : மோடி சர்ச்சை கருத்து

Source link