இயக்குநர் சசி இயக்கியிருக்கும் ‘நூறு சாமி’ திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் மிஷ்கின், “நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில், ஒரு சாமி இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. எப்போதும் ஒரு தாயுள்ளத்தோடு பார்க்கக்கூடியவர் சசி. ஆண்களிடம் இருக்கும் பெண்மைத்தன்மையைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.
பெண்த்தன்மை அதிகமாக இருக்கும் மனிதர்கள் மிகச்சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த ‘நூறு சாமி’ படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு, எனக்கு அழைத்து ‘எனக்காக ஒரு இரண்டு மணி நேரம் உன் அலுவலகத்தைவிட்டு உன்னால் வெளியே போக முடியுமா’ எனக் கேட்டார். பிறகு நானும் வெளியே போனேன்.
என் உதவி இயக்குநரிடம் இந்தக் கதையைச் சொன்னார். அவர் போன பிறகு பத்து நாட்களுக்கு இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இந்தப் படத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்கள், இதைப் பற்றி என் உதவி இயக்குநர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
இப்போ நான் நிறைய படம் பார்ப்பதில்லை. நான் பார்க்கும் படம், நல்ல படமாக இல்லையென்றால் எனக்கு காய்ச்சல் வந்துவிடும். என்னால் படமே எடுக்க முடியாது.
நல்ல படம் பார்த்தால்தான் எனர்ஜி கிடைக்கும்,” என்றவர், “இந்த சமுதாயத்தின் விதியை எழுதிய ஆண்கள், இந்த சமூகத்தின் சட்டத்திட்டங்களை எழுதிய வெறும் ஆண்கள், பெண்களை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தான் இந்தப் படம் பேசுகிறது.

நான் விஜய் ஆண்டனியின் எந்தப் படத்தையும் பார்த்தது கிடையாது. ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ஹிட் ஆனபோது சசி அண்ணனுக்கு கால் பண்ணி, ‘படம் பயங்கர ஹிட்டாமே’ என வாழ்த்தினேன்.
அப்போது அவர், ‘எல்லாம் சரி, நீ படத்தை பார்த்திடாத. அவ்வளவு நல்ல படம் கிடையாது’. என்றார்.
ஒரு நடிகர் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, தன்னையே அவர் புரிந்துகொள்கிறார். அப்படி இந்தப் படத்தில் உங்களைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் விஜய் ஆண்டனி,” எனப் பேசினார்.






















