சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் 2ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றிருந்தார். திமுக எம்.பி ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசி வருவதால் எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ – வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர், அமைச்சர் உதயநிதிக்கு எதிராகவும், மற்றொரு செயலாளர் கிஷோர் குமார், அமைச்சர் சேகர்பாபுவிற்கு எதிராகவும், மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் ஆ.ராசாவிற்கு எதிராகவும் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 23 ம் தேதி இந்த வழக்குகளின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்குகளில் நீதிபதி அனிதா சுமந்த் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அதில், அமைச்சர் உதயநிதி பேசியது தவறு. ஆனால் பதவி நீக்கம் செய்ய அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனுதாரர் கோரிக்கைகள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எதன் அடிப்படையில் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என கேள்வி எழுப்ப முடியாது என நீதிபதி தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்