தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளார். அவருக்கு வயது 74. இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவற்றை தவிர விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறார். தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் தரப்பில் போட்டியிடும் மாணிக்கம் தாக்கூரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பொறுப்பு அமைச்சர் என்னும் முறையில் தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராணி குமாரை ஆதரித்து பரப்புரை என மும்மரமாக செயல்பட்டு வருகிறார்.

மருத்துவமனையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்:

இந்நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு நேற்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ குழு கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் முடிவுகளை பொறுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படுவதும், டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.