Maharashtra: மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறுவேன் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி:

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து பாஜக உடன் கூட்டணி அமைத்தனர். ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரான நிலையில், சிவசேனா கட்சியும் அவருக்கே சேரும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தன.

இதையடுத்து, தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த அஜித் பவார் தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பாஜக கூட்டணியில் இணைந்தனர். அதன்படி தற்போது பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஏக்நாத் ஷிண்டேவை டம்மியாக்கும் பாஜக?

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக பல்வேறு அதிரடி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பால் தாக்ரேவின் நேரடி வாரிசும், மகாராஷ்டிரா நவநிர்மான்சேனா அமைப்பின் தலைவருமான ராஜ்தாக்ரே, அண்மையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அப்போது, பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என ராஜ் தாக்ரேவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பை, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா உடன் இணைக்க கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அமைப்பிற்கு ராஜ் தாக்ரேவையே தலைவராக நியமிப்பதன் மூலம், மராத்தி சமூக வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், ராஜ்தாக்ரே உடன் சிவசேனா இணைக்கப்பட்டால், தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும் என ஏக்நாத் ஷிண்டே கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் – அஜித் பவார்:

இதனிடையே, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு, பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதியில் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே அறிவித்துள்ளார்.

கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரித்துள்ளார்.

ராஜ்தாக்ரேவை தலைவராக்கி ஏக்நாத் ஷிண்டேவை டம்மியாக்க பாஜக முயல்வது, கூட்டணி கட்சிக்கு போட்டியாகவே வேட்பாளர்களை களமிறக்குவது போன்ற நடவடிக்கைகளால், மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.