Miss World 2024: 2024ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் இந்தியாவின் சினி ஷெட்டி, முதல் 4 இடங்களுக்குள் வரத் தவறினார்.
உலக அழகி 2024 போட்டி:
71வது உலக அழகி பட்டத்தை செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா சனிக்கிழமை வென்றார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் கன்வென்சன் செண்டரில் நடைபெற்ற போட்டியை, பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான கரண் ஜோஹர் மற்றும் 2013 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மேகன் யங் ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில், லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன், டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஆச்சே ஆபிரகாம்ஸ், போட்ஸ்வானாவின் லெசெகோ சோம்போ மற்றும் கிறிஸ்டினா ஆகியோர், டாப் 4 போட்டியாளர்களாக தேர்வாகினர். அதிலிருந்து, 2024ம் ஆண்டு உலக அழகி போட்டிக்கான பட்டத்தை கிறிஸ்டினா பிஸ்கோவா வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற, போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடிசூட்டினார். லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
யார் இந்த கிறிஸ்டினா பிஸ்கோவா:
24 வயதான கிறிஸ்டினா ப்ராக் நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். தான்சானியாவில் உள்ள சோண்டா அறக்கட்டளைக்கு தன்னார்வத் தொண்டு செய்து, பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார். இசையில் ஆர்வம் கொண்டவர் மற்றும் ஒன்பது வருடங்கள் ஆர்ட் அகாடமியில் இருந்ததாக கூறப்படுகிறது. புல்லாங்குழல் மற்றும் வயலின் வாசிப்பதில் கைதேர்ந்தவராகவும் கூறப்படுகிறது. ஆங்கிலம், போலந்து, ஸ்லோவாக் மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாகப் பேசுவார் என கூறப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற டாடானா குச்சரோவாவுக்குப் பிறகு, செக் குடியரசைச் சேர்ந்த ஒருவர் உலக அழகி பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
ஏமாற்றம் தந்த சினி ஷெட்டி:
இந்த போட்டியில் இந்திய சார்பில் 2022ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷினி ஷெட்டில் பங்கேற்றார். ஆனால், முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறத் தவறினார். போட்டியின் போது, உலகளவில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சமூக ஊடகங்களின் பங்கு குறித்து சினியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர் அளித்த பதில், நடுவர்களை ஈர்க்கவில்லை. இதையடுத்து ஆசியா மற்றும் ஓசியானியா பிரிவில் லெபனானின் யாஸ்மினாவிடம் தோல்வியடைந்தார்.
தேர்வுக் குழு:
110 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். மிஸ் வேர்ல்ட் 2017 வெற்றியாளர் மனுஷி சில்லர், நடிகர்கள் கிருத்தி சனோன், பூஜா ஹெக்டே, ஜூலியா மோர்லி, உலக அழகி அமைப்பின் தலைவர் மற்றும் CEO; திரைப்பட தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் செய்தி ஆளுமை ரஜத் சர்மா உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு சேர்ந்து மிஸ் வேர்ல்ட் 2024 வெற்றியாளரை தேர்வு செய்தனர். ஏராளமான பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு, உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண