Infosys Narayana Murthy: தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி.
நாராயண மூர்த்தி:
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸை தொடங்கியவர்களில் ஒருவர் நாராயண மூர்த்தி. ஐடி துறையில் சர்வதேச அளவில் இந்தியா அடைந்த பாய்ச்சலுக்கு இன்ஃபோசிஸ் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.
நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் கூட அவரது இன்ஃபோசிஸ் நிறுவனம் இன்னும் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமாகச் சிறப்பாகவே இயங்கி வருகிறது. நாராயண மூர்த்தி ஓய்வு பெற்றாலும், அவரும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் தொடர்ச்சியாகச் செய்திகளில் இடம்பிடித்து வருவார்கள்.
குறிப்பாக, நாராயண மூர்த்தி கூறும் ஒவ்வொரு கருத்துகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு “இளைஞர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்” என்று நாராயண மூர்த்தி கூறி கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதோடு இல்லாமல், நாராயண மூர்த்தி, அவரது மனைவி சுதா மூர்த்தி எகானமி கிளாஸில் பயணித்து இருந்தனர். அதேபோல, இவர்களது மகள், பேரக்குழந்தைகள் அனைவரும் சாதாரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு சாலையோர கடைகளில் புத்தகங்களை வாங்குவதும் இணையத்தில் டிரண்டானது.
பேரனுக்கு பரிசளித்த நாராயண மூர்த்தி:
இப்படி பலருக்கு எடுத்துக்காட்டாகவே இவர்கள் உள்ளனர். இதற்கிடையில், ராஜ்யசபா உறுப்பினராக சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரனுக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை பரிசளித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதத்தில் நாராயண மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து தாத்தா, பாட்டியானார்கள். இதன் மூலம், நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்திக்கு மூன்றாவது பேரக்குழந்தைகள் ஆவார். ஏற்கனவே, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
எனவே, தனது நான்கு மாத பேரன் ஏக்ரகா ரோஹன் முர்த்திக்கு ரூ.240 கோடி மதிப்புள்ள இன்ஃபோசிஸ் பங்குகளை பரிசாக அளித்துள்ளார் நாராயண மூர்த்தி. இதன் மூலம், ஏக்ரகா ரோஹன் முர்த்தி 15,00,000 பங்குகள் அல்லது 0.04 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அதே நேரத்தில், இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Petition Against TN Governor: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் – தமிழ்நாடு அரசு அதிரடி..
மேலும் காண