Election King K Padmarajan to contest election for the 239th time this time from Dharmapuri | Election King: 238 முறை தோல்வி! ஜனநாயக திருவிழாவில் பங்கேற்கும் ‘எலெக்சன் கிங்’


Election King: உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா அடுத்த மாதம் தொடங்குகிறது. உலகின் மிக்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மக்கள் காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
எலக்‌ஷன் கிங்:
அனைவரும் சமம் என்ற மகத்தான கொள்கையை அடிப்படையாக கொண்ட அரசியல் சாசனம் சாமானியன் கூட, இந்தியாவின் உச்சபட்ச பதவியை அடைவதற்கான உரிமையை நமக்கு வழங்கியுள்ளது. அரசியல் ஜனநாயகத்தை தாண்டி சமூக ஜனநாயகத்தை இலக்காக கொண்டு இயங்கி வருகிறது நமது அரசியல் சாசனம்.
தேர்தலில் வெற்றி, தோல்வியை தாண்டி பங்கேற்பதே முக்கிய அரசியல் நடவடிக்கையாகும். அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் சேலம் மேட்டூரை சேர்ந்த கே. பத்மராஜன். 65 வயதாகும் இவர், கடந்த 1988ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.
238 முறை தோல்வி:
டயர் கடை உரிமையாளரான பத்மராஜன், தேர்தலில் போட்டியிட்டு இதுவரை 238 முறை தோல்வி அடைந்துள்ளார். இருப்பினும், மனம் தளராமல் வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் போட்டியிட உள்ளார். தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம் இவரை கண்டு மக்கள் கேலி செய்து, சிரித்துள்ளனர். ஆனால், எளிய சாமானியன் கூட தேர்தலில் பங்கு கொள்ள முடியும் என்பதை எடுத்துரைக்கவே தான் போட்டியிடுவதாக கூறுகிறார் பத்மராஜன்.
இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், “வெற்றி பெறுவதற்காகவே அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், எனக்கு அப்படி இல்லை. பங்கேற்பதே எனக்கு வெற்றிதான். தேர்தலில் தோல்வி அடைவது எனக்கு மகிழ்ச்சியே” என மீசையை முறுக்கியபடி பதில் அளிக்கிறார் பத்மராஜன்.
பஞ்சாயத்து தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை:
‘எலெக்சன் கிங்’ என அழைக்கப்படும் பத்மராஜன், நாடு முழுவதும் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல் வரை போட்டியிட்டுள்ளார். தற்போதைய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என பல தலைவர்களுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.
இந்த முறை, தர்மபுரி தொகுதியில் களம் காணும் பத்மராஜன், தொடர்ந்து பேசுகையில், “வெற்றி இரண்டாம் பட்சம்தான். எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் எனக்கு கவலை இல்லை. கடந்த 30 ஆண்டுகளில், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக லட்சக்கணக்கான பணத்தை செலவு செய்துள்ளேன்.
தருமபுரியில் போட்டியிடுவதற்காக 25,000 ரூபாய் பாதுகாப்பு வைப்பு நிதியாக செலுத்தியுள்ளேன். தேர்தலில் பதிவான வாக்குகளில் 16 சதவிகித வாக்குகளை பெறாவிட்டால், அந்த பணம் திருப்பி தரப்படாது” என்றார்.
இந்திய தேர்தலில் அதிக முறை தோல்வி அடைந்தவர் என லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார். இதுவே, அவரின் ஒரே வெற்றியாகும். கடந்த 2011ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் போட்டியிட்டு 6,273 வாக்குகளை பெற்றுள்ளார். இதுவே, அவர் பெற்ற அதிகபட்ச வாக்குகள் ஆகும்.
 

மேலும் காண

Source link