Billgates meets pm modi in delhi tutucorin pearls and some gifts and discuss ai and climatic condition | Billgates Modi: ”தூத்துக்குடி முத்துகள்” பில்கேட்ஸுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மோடி


Billgates Meets Modi: உலகின் மிகப்பெரிய பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளருமானவர் பில்கேட்ஸ். இவர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.
பில்கேட்ஸுக்கு பரிசளித்த மோடி:
இந்தியாவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 25வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அப்போது, இந்திய பிரதமர் மோடியை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதன்படி, இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பில்கேட்ஸ், பிரதமர்  மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவது, காலநிலை மாற்றம் குறித்து கலந்துரையாடினர். தொடர்ந்து, பிரதமர் இல்லத்திற்கு வந்த பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசுகளை வழங்கினார்.
அதன்படி, தூத்துக்குடி முத்துகள், களிமண்ணால் செய்யப்பட்ட தமிழ்நாடு குதிரை பொம்மைகள், காஷ்மீர் சால்வை, குங்குமப்பூ, டார்ஜிலிங் தேநீர், நீலகிரி தேநீரை பரிசாக பில்கேட்ஸுக்கு வழங்கினார் பிரதமர்  மோடி.  அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ஊட்டச்சத்து குறித்த புத்தகங்களை வழங்கினார் பில்கேட்ஸ்.
’போஷன் உத்சவ்’ என்ற புத்தகத்தை கடந்த பிப்ரவரி மாதம் பில்கேட்ஸ் வெளியிட்ட நிலையில், பிரதமர் மோடிக்கு இன்று பரிசாக வழங்கினார். இவற்றையெல்லாம் பெற்றுக் கொண்ட இருவரும், ஒருவரைக்கொருவருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். 
சந்திப்பில் என்ன நடந்தது?
இருவருக்கும் இடையே நடந்த இந்த சந்திப்பு குறித்த வீடியோவும் பிரதமர் மோடியின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் டிஜிட்டல் புரட்சி குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர். இந்தோனேசியாவில் நடந்த ஜி20 மாநாட்டின் போது, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சி குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியைப் பாராட்டிய பில்கேட்ஸ், தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், அது உண்மையில் முன்னிலையில் இருப்பதாக கூறினார். பின்னர், இருவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து விவாதித்தனர். ஜி20 உச்சி மாநாட்டின்போது ஏஐ எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை பிரதமர் மோடி, பில்கேட்ஸிடம் விளக்கினார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம்:
காசி தமிழ் சங்கமம் நிகழ்வின்போது, ஏஐ பயன்படுத்தி தனது இந்தி பேச்சை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று கூறினார். மேலும், ஏஐ தொழில்நுட்பத்தின் சவால்களையும்,  நன்மைகளையும் எடுத்துரைத்தார்.  அதன்படி, “இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சக்தி வாய்ந்த தொழில்நுட்பம் பயிற்சி இல்லாத, திறமையற்றவரிகளின் கையில் செல்லும்போது தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.  உதாரணமாக என்னுடைய குரலே தவறான முறையில் பயன்படுத்தப்படலாம்.
இந்த டீப் பேக் வீடியோ அல்லது ஆடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டால் தான் புரிகிறது. இல்லையென்றால் மக்கள் அதனை நம்புகின்றனர். எனவே, ஏஐ தொழில்நுட்பம் மூலம் எதை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை வரையறுக்க வேண்டும்” என்றார் மோடி. 
இதற்கு பதிலளித்த பில்கேட்ஸ், “ஏஐ தொழில்நுட்பம் தற்பாது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தால் நன்மைகளும், தீமைகளும் உள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தில்  மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கக்கூடியது. ஆனால், அதில் பல சவால்களும் உள்ளன” என்றார்.

மேலும் காண

Source link