கரும்பு கொள்முதல் விலையை ரூ.93 மட்டும் உயர்த்துவது போதுமானதல்ல, டன்னுக்கு ரூ.4500 வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 2026&27ஆம் ஆண்டுக்கான அரவைப் பருவத்தில், 10.25% சர்க்கரைச் சத்து கொண்ட கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.3650 ஆகவும், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புக்கான கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3383 ஆகவும் உயர்த்தப் படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த விலை உயர்வு எந்த வகையிலும் போதுமானதல்ல.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளில் 9.50%க்கும் குறைவான சர்க்கரைச் சத்து மட்டுமே இருக்கும் என்பதால் அவற்றுக்கு டன்னுக்கு ரூ.3,383 வழங்கப்படும்.
இது 2025&26 ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.3290 உடன் ஒப்பிடும் போது ரூ.93, அதாவது 2.82% மட்டுமே அதிகமாகும். 2024&25ஆம் ஆண்டில் இதே வகையான கரும்புக்கு ரூ.3151 வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அதை விட ரூ.139, 4.41% கொள்முதல் விலை உயர்த்தப் பட்டது. ஆனால், அதனுடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் பாதியளவு மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது.
கரும்பு கொள்முதல் விலை இந்த அளவுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு காரணம், அதன் சாகுபடி செலவுகளை கணக்கிடுவதில் மத்திய அரசு கடைபிடிக்கும் தவறான முறை தான். நடப்பாண்டில் 10.25% சர்க்கரை சத்து கொண்ட ஒரு டன் கரும்பை சாகுபடி செய்வதற்கு ரூ.1820 மட்டுமே செலவு ஆவதாக மத்திய அரசு கணக்கிட்டிருக்கிறது.
சாகுபடி செலவுடன் உழவர்களுக்கு 50% இலாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைத்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக 100.50% அதிகமாக இலாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயம் செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது.
மத்திய அரசால் கணக்கிடப்படுவதை விட சுமார் 81% அதிகமாக, ஒரு டன் கரும்பு சாகுபடி செய்வதற்கு ஏறக்குறைய ரூ.3300 வரை செலவு ஆவதாக உழவர் அமைப்புகள் கூறுகின்றன. கரும்புக்கான சாகுபடி செலவை கணக்கிடும் போது, நிலத்தை தயார் செய்தல், விதை மற்றும் நடவு, உரங்கள், நீர்ப்பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிர்ப்பாதுகாப்பு, கரும்பு வெட்டுதல் ஆகிய செலவுகளுடன் நிலத்திற்கான குத்தகை மதிப்பு, பணியாளர்களுக்கான கூலி ஆகியவையும் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால், தொழிலாளர்கள் கூலி, குத்தகை உள்ளிட்ட பல செலவுகளை மத்திய அரசு கணக்கில் சேர்க்காதது தான் கரும்பு கொள்முதல் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட காரணம் ஆகும்.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3300 செலவாகும் நிலையில், அதை விட வெறும் ரூ.83 மட்டும் கூடுதலாக விலை கொடுத்தால் உழவர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்காது. கரும்பு சாகுபடிக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் விவசாயிகளுக்கு இலாபமே இல்லை என்றால், வேளாண்மையை, குறிப்பாக கரும்பு சாகுபடியை உழவர்கள் முற்றிலுமாக கைவிட்டு விடுவர். அப்படி ஒரு நிலைமை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் கரும்புக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும்.
ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்வதற்கு ரூ.3,300 வரை செலவாகும் நிலையில், அதனுடன் 50% இலாபம் மற்றும் போக்குவரத்துச் செலவு சேர்த்து டன்னுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை.
ஆனால், கிட்டத்தட்ட உற்பத்தி செலவுக்கு இணையான தொகையையே கொள்முதல் விலையாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதனால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து தான் ஈடு செய்ய வேண்டும். அது தான் நியாயமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் 2016&ஆம் ஆண்டு வரை கரும்புக்கு ரூ.750 வீதம் ஊக்கத்தொகை சேர்த்து கொள்முதல் விலை வழங்கப்பட்டு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் அது நிறுத்தப்பட்டு விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் அது இப்போது டன்னுக்கு குறைந்தது ரூ.1200 ஆக அதிகரித்திருக்கும். ஆனால், அந்த அளவுக்கு ஊக்கத்தொகை வழங்காத திமுக அரசு கடைசியாக 2024&25 பருவத்தில் டன்னுக்கு ரூ.349 மட்டுமே வழங்கியது. நடப்பு பருவத்தில் அதுவும் வழங்கப்படவில்லை.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.5000 கொள்முதல் விலையை உடனடியாக வழங்க முடியாத சூழல் இருந்தால், நடப்பாண்டில் முதல் கட்டமாக 4500 ரூபாயாவது கொள்முதல் விலை வழங்கப்பட வேண்டும். அதற்காக இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கொள்முதல் விலையை குறைந்தது ரூ.500 மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.
மீதமுள்ள 617 ரூபாயை தமிழகத்தில் புதிதாக அமையும் அரசு ஊக்கத் தொகையாக வழங்கி உழவர்களுக்கு ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports