Anantkumar Hegde 6 Time BJP MP from Uttara Kannada replaced after Constitution Change remark | BJP MP: ஆறு முறை எம்.பி.யா இருந்தாலும் இதான் கதி! அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை கருத்து


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் முடிகிறது. ஜூன் 4ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜகவின் வேட்பாளர் பட்டியல்:
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே, 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சிலருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 
போபால் மக்களவை உறுப்பினர் பிரக்யா தாக்கூர், தெற்கு டெல்லி மக்களவை உறுப்பினர் ரமேஷ் பிதுரி உள்ளிட்டவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இணைந்துள்ளார் உத்தர கன்னடா மக்களவை உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே.
கடந்த 28 ஆண்டுகளில், உத்தர கன்னடா மக்களவை தொகுதியில் இருந்து 6 முறை தேர்வாகியுள்ளார். அனந்த்குமார் ஹெக்டே. நான்கு முறை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். இப்படிப்பட்ட செல்வாக்கான எம்பிக்கு பாஜக இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
சர்ச்சை பேச்சுக்கு பேர் போன அனந்த்குமார் ஹெக்டே:
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஹாவேரி மாவட்டம் சித்தாபூரில் உள்ள ஹல்கேரி கிராமத்தில் அனந்த்குமார் ஹெக்டே பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்கள் மத்தியில் பேசிய அவர், “வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம்.
இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என மோடி கூறியுள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையை அடைவது அவசியம்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைத் திரித்து, இந்துக்களை ஒடுக்கும் விதிகளையும் சட்டங்களையும் காங்கிரஸ் அறிமுகப்படுத்தியது. அதற்கு மாற்றங்களை கொண்டு வர, நமக்கு இந்த பெரும்பான்மை போதாது” என்றார்.
அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவோம் எனக் கூறிய பாஜக எம்பியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை போட்டியிட பாஜக மேலிடம் அவருக்கு வாய்ப்பு மறுத்துள்ளது. அவருக்கு பதில் ஆறு முறை எம்.எல்.ஏவான விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.                
இதையும் படிக்க: ராஜ் தாக்கரே வசமாகிறதா சிவசேனா? பா.ஜ.க. போடும் மெகா பிளான் – ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆப்பு!

மேலும் காண

Source link