பா.ஜ.க உடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஹேப்பி கிட்ஸ் அகாடமி ஏற்பாட்டில் கலாம் உலக சாதனை நிறுவனத்தினர் முன்பு, பள்ளி மாணவ மாணவிகளின் கண்களை கட்டிகொண்டு படம் வரைதல், cube- ஐ பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவத்தை கொண்டு வருதல், யோகாசனம் செய்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, சாதனைகளை படைத்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திரைப்பட பாடல் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் இந்த மண்ணில் பிறக்கையிலே என்ற கருத்துக்கு ஏற்ப உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளும் ஒரு வகையில் திறமையானவர்கள் அதை வெளி கொண்டு வர வேண்டும் என்றார்.
2015ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்த போது மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் வங்கிகளில் அந்த தொகையை செலுத்தினோம். ஆனால் தற்போது திமுக அரசு வழங்கும் 6000 ரூபாயை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிறது.
ஒவ்வொரு பகுதிகளிலும் நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட பயனாளர்களின் பட்டியலை திமுகவினர் வைத்துக்கொள்கிறார்கள். அந்த பெயர் பட்டியலை நியாய விலை கடைகளுக்கு முன்பு ஒட்டி விட்டால் சிரமம் ஏற்படாது.
வெளி மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்களை கொண்டு வந்து டோக்கன்கள் வழங்கி இருக்கலாமே? சுலபமாக இருந்து இருக்கும். நேரடியாக வீடுகளுக்கு சென்று கூட டோக்கன்களை விநியோகம் செய்யவில்லை. ஆனால் அவ்வாறு செய்ய தவறியது திமுக அரசு.
6000 ரூபாய் வாங்குவதற்குள் ஏதோ சொத்தை எழுதி கொடுப்பது போல் மக்களை சிரமப்படுத்துகிறார்கள், திமுக. வங்கிகளில் கூட நிவாரண தொகையை செலுத்தி இருக்கலாம்.
நிவாரண நிதிக்கான டோக்கன்களை நியாய விலை கடை ஊழியர் வழங்காமல் கட்சிக்காரர்கள் வழங்குகிறார்கள். டோக்கன் வழங்குவதை காரணம் காட்டி நியாய விலை கடைகள் சில நாட்களாக திறக்காமல் உள்ளன.
எண்ணூர் விவகாரத்தில் எண்ணெய் கழிவுகளை உடனடியாக எடுத்திருந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. எதிர்க்கட்சி உடனடியாக வருகிறது, ஆனால் ஆளுங்கட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாமதமாக செல்கிறார் என்று, அவர் வந்தபோது கூட மக்கள் முற்றுகை போராட்டம் செய்தனர். இன்று வரை அந்த மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற நிவாரண பொருட்களோ, வேலை வாய்ப்போ கிடைக்கவில்லை.
சிபிசிஎல் நிறுவனத்தை அரசு அணுகி அவர்களுக்கு நிவாரணம் வாங்கி கொடுக்கலாம். ஆனால் இதுவரை வழங்க வில்லை. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதாரண நிலைக்கு நீர் நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை.
இயல்புநிலை வரவில்லை என்றால் மீன்கள், இரால்கள் முகத்வாரத்திற்கு வராது. அதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு இருக்க வேண்டும். மக்களை உதாசீனப்படுத்தும் துன்பப்பட வைக்கும் வேதனைப்படுத்தும் Sadist அரசாங்கம் திமுக.
எண்ணூர் பகுதி மக்களுக்கு எண்ணெய் கசிவு பாதிப்பு ஏற்படும் கூடுதலாக நிவாரணம் அறிவிக்கவில்லை. இந்த பாதிப்புக்கு சிபிசிஎல் நிறுவனம் காரணம் ஆனால் அவர்களை நிர்பந்தப்படுத்தி நிவாரணம் பெற்று தர வேண்டியது அரசின் பொறுப்பு. திமுக என்றாலே நில அபகரிப்புக்கு சொந்தக்காரர்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு சட்டம் இவர்களுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது.
அரசாங்கமே அபகரிப்பு செய்கிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது. முதலமைச்சர் செல்பி எடுத்தாலே இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது செல்பி என்றாலே இப்போது பயம் வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு மேனியா இருப்பது போல், ஸ்டாலினுக்கு சிலை மேனியா உள்ளது. எங்கு பார்த்தாலும் அப்பாவின் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
மக்கள் ஏமாந்தால், தமிழ்நாட்டை கலைஞர் நாடு என்று மாற்றி விடுவார், ஸ்டாலின். கிளம்பாக்கம் பேருந்து நிலையம் எடப்பாடி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டம் இவர்கள் கொண்டுவந்த திட்டம் போல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று வெட்கமில்லாமல் பெயர் வைத்துள்ளனர்.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. ஜெயிக்கப் போகும் கட்சி நாங்கள் எங்களுடன் யார் வந்தாலும் அங்கீகாரம் இருக்கும்.
கண்டிப்பாக எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும். காங்கிரசுக்கு அதிமுக கூட்டணி கதவு திறந்து இருக்கிறது. நாங்கள் யாரையும் சென்று அழைக்க மாட்டோம். ஆனால், அது பாஜகவுக்கு பொருந்தாது. அவர்களுக்கு அதிமுகவிற்குள் நுழைவதற்கான கதவு மூடிவிட்டது.
தேர்தல் நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன நாங்களும் தொடங்கி விட்டோம் உரிய நேரத்தில் வெளிப்படையாக தெரிவிப்போம். திமுக காங்கிரஸ் கூட்டணியை நாங்கள் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது உள்ள திமுகவை அனைத்து கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில் தானாகவே நெல்லிக்கனி போல கூட்டணி கலைந்து விடும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

























Worth flagging this site to a few specific friends who would appreciate the editorial sensibility, and a look at gildedcoveartisanexchange…